சென்னை: கோடைகால சிறப்பு தள்ளுபடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ரூ.1,550 கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.5,420 கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்யலாம் என்றும், மார்ச் 1ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு கோடைகால சிறப்பு தள்ளுபடி கட்டணத்தில் பயண டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானங்களில், சலுகை குறைந்தபட்சமாக, ரூ.1,550 கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
அதோடு சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில், குறைந்தபட்ச கோடைகால சிறப்பு தள்ளுபடியாக ரூ.5,420 கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இதற்காக நேற்று முதல் மார்ச் 1ம் தேதி வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மற்றும் மொபைல் ஆப், அனைத்து முக்கிய முன்பதிவு தளங்களிலும் டிக்கெட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த கட்டண சலுகை டிக்கெட்டுகளை, உள்நாடு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்காக வருகின்ற மார்ச் 3ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதிக்குள், எந்த நாட்களில் வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த சலுகை கட்டண டிக்கெட்களில் பயணிக்கும் பயணிகள், கையில் எடுத்து செல்லும் லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்படும். கூடுதல் எடை உடைய செக்கின் லக்கேஜ் எடுத்து சென்றால், அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதோடு இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். ஏர் இந்தியா விமானங்களுக்கு கிடையாது என்றும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
