×

தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்: அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று அனைத்துக்கட்சி நிர்வாகிகளிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். 1.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். புதுச்சேரியில் நேற்று மாலை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழுவினர் நேற்று மதியம் 12 மணிக்கு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது, எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையர்கள் கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்இளங்கோ (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), தங்கபாலு, ராம்மோகன் (காங்கிரஸ்), கராத்தே தியாகராஜன் (பாஜ), ரவிக்குமார், குணவழகன் (விசிக), ஆறுமுகநயினார், சண்முகம் (மார்க்சிஸ்ட்), நல்லதம்பி, ஜனார்த்தனன் (தேமுதிக), சீமான், பாக்யராஜ் (நாம் தமிழர்), ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி), ஜோசப்ராஜா, வசீகரன் (ஆம்ஆத்மி), சீனிவாசன், அசோக்சாமி (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், கட்சி வாரியாக தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தனர். இந்த ஆலோசனை மதியம் 2.30 மணி வரை நடந்தது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. அளித்த மனு: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் வயது குழு விவரங்கள் உட்பட சீரான, தரப்படுத்தப்பட்ட பட்டியலைப் பகிர்ந்து கொள்ளவும், பொது மக்களின் தகவலுக்காக அதை வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து டிஇஓக்களுக்கும் ஆணையம் உத்தரவிட வேண்டும். வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் கணக்கெடுப்பு படிவங்களின்படி முறையாகப் பதிவு செய்யப்படவில்லை, மேலும் பழைய வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. அதை உரிய நேரத்தில் சரி செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஊடக விளம்பரத்திற்கும் ஒப்புதல் பெற வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல்கள் அல்லது உத்தரவுகளை வழங்க எம்சிஎம்சி ஒப்புதல் குழுக்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.நட்சத்திர பேச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கூட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் வாகனங்களுக்கான அனுமதிகளை தலைமை நிர்வாக அதிகாரி, டிஜிபி அலுவலகம் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்கலாம் என்ற அறிவிப்புகளை வெளியிடலாம். வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் படிவம் 17சி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருடன் நேற்று ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த கட்சிகளின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயக்குமார் (அதிமுக): தலைவர்கள் பொதுவாக மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது அனுமதி வழங்குவது, இடம் வழங்குவதில் வேறுபாடு காட்டக்கூடாது. பறக்கும் படைக்கு தகவல் கொடுக்கும்போது அவர்கள் நடுநிலையோடு செயல்பட ஒன்றிய அரசு ஊழியர்களையும் அதில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தங்கபாலு (காங்கிரஸ்): எஸ்ஐஆர் சீர்திருத்தங்கள் வந்த பிறகு 23ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிறகும் பல இடங்களில் தகுதியானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து தெரிவித்தோம். வருகிற தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜ): தமிழகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ரிட்டனிங் ஆபீசர்கள் சிலர் மீது புகார் உள்ளது. அவர்களை மாற்ற வேண்டும். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதுவும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
ரவிக்குமார் (விசிக): தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே அதிக இடைவெளி கூடாது. தேர்தல் பரப்புரை காலம் 15 நாட்களுக்குமேல் இருக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளேம்.
வசீகரன் (ஆம்ஆத்மி): பணப்பட்டுவாடா, பணத்தை பிடிப்பது போன்று ஒரு ஆக்‌ஷன் காட்டுகிறார்கள். பிடித்து என்ன பண்ணுகிறார்கள்? அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை, அதனால் அச்சம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு என்ன நடவடிக்கை என்று கேட்டோம். தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நம்பிக்கை இல்லை. இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒரே கட்டமாக, அதுவும் பெரும்பாலும் தேசிய கால அட்டவணையின் முதல் கட்டத்திலேயே நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மிக நீண்ட காலத்திற்கு (கடந்த முறை சுமார் 42 நாட்கள்) பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் நீண்டகால பாதுகாப்பில் எங்களுக்கு போதிய நம்பிக்கை இல்லை.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் காலத்தை குறைக்க, தேசிய தேர்தல் அட்டவணையின் இறுதிக் கட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சிக்கு, தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, எங்கள் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்வது 20 நாட்களுக்குள் என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகும். ஒரு முழுமையான பிரச்சாரத்திற்கு 60 நாட்கள் தேவை என்றாலும், குறைந்தபட்சம் 40 நாட்களைக் கட்டாய பிரச்சாரக் காலமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை கமிஷனர் அருண், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (அனைத்து மாவட்ட கலெக்டர்கள்), அமலாக்க அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள், ஐஜிகள், டிஐஜிகள் ஆகியோருடன் தேர்தல் திட்டமிடல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, பறிமுதல் நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பணப்பட்டுவாடா மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தன. அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது என்றனர். 2வது நாளாக இன்று (27ம் தேதி) மதியம் 12 மணிக்கு சென்னை ஓட்டலில் நிருபர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து இன்று மதியம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, வங்கி அதிகாரிகள், தபால் துறை உள்ளிட்ட 23 தேர்தல் தொடர்பான விசாரணை முகமைகளின் உயர் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இரண்டு நாள் ஆலோசனையிலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

தேர்தல் ஆணையர்கள் குழுவிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதகள் தெரிவித்த சில கருத்துகள்:
* தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட வேண்டும்.
* தேர்தலின்போது பணப்பட்டுவாடா மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
* தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
* தேர்தல் தேதிகளை அறிவிக்கும்போது வரவிருக்கும் திருவிழாக்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Election Commissioner ,India ,Gnanesh Kumar ,Tamil ,Nadu ,Legislative Assembly ,
× RELATED நீதிபதி யஷ்வந்த் மீதான விசாரணைக்குழு...