ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய கடைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் குளக்கரை சாலையில் தாமரைக் குளம் உள்ளது. ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரைக் குளம் தற்போது நான்கு ஏக்கராக சுருங்கி உள்ளது. திருமுல்லைவாயல் சுற்று வட்டார பகுதிக்கு நீர் ஆதாரமாக தாமரைக் குளம் உள்ளது. குளத்தின் நீர் பிடிப்பு பகுதியில் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஒருவர் வணிக நோக்கத்துடன் 1500 சதுரடி கொண்ட இரண்டு கடைகள் கட்டி வந்தார்.
இதனை அறிந்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் நான்கு முறை நோட்டீஸ் கொடுத்தும் கடை அகற்றப்படவில்லை. இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் சரண்யா உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இரண்டு கடைக்களுக்கும் சீல் வைத்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க திருமுல்லைவாயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
