×

உச்ச நீதிமன்றம் வரிகளை ரத்து செய்தாலும் பழைய வர்த்தக ஒப்பந்தங்களே நீடிக்கும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகும், மாற்று சட்டங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதாகவும், பழைய வர்த்தக ஒப்பந்தங்களையே தொடர உலக நாடுகள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2வது ஆட்சிக் காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதில் அதிபர் டிரம்ப் உள்நாட்டு பொருளாதாரம், விலைவாசி, ஆட்சி நிர்வாகம், வரிகள் தொடர்பான சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, வெளியுறவு கொள்கை, ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாவது:
உண்மையில் இது எனது 3வது பதவிக்காலமாக இருந்திருக்க வேண்டும். சில சம்பவங்களால் எனது 2வது பதவிக்காலமாகி விட்டது. நான் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக நாட்டின் பொருளாதாரம் செத்துப் போன நிலையில் இருந்தது. இப்போது நமது தேசம் மீண்டு வந்து விட்டது. இது அமெரிக்காவின் பொற்காலம். நாம் முன்பை விட சிறந்ததாகவும் வலிமையாகவும் உருவெடுத்துள்ளோம்.

உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெட்ரோல் விலை, மருந்து விலைகள் குறைந்து லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் நன்மை அடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். நமது பொருளாதார மாற்றங்களில் முதன்மை காரணங்களில் ஒன்று வெளிநாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள். நான் இந்த வரிகளை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை நமது நாட்டிற்கு பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் பெரிய ஒப்பந்தங்களை செய்தேன். எல்லாம் நன்றாக வேலை செய்தது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டிய நாடுகள் இப்போது பில்லியன் கணக்கான டாலர்களை வரியாக செலுத்துகின்றன. இந்த வரிகள் மூலம் அமெரிக்க நுகர்வோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீதான சுமையை இறக்கி வைத்தேன். இந்த வரிகள் நவீன கால வருமான வரி முறையை மாற்றக் கூடியவை. ஆனால் இந்த வரிகளை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் துரதிஷ்டவசமானது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே ஒப்பந்தங்களை செய்து விட்டோம். அதனால் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். அனைத்து ஒப்பந்தங்களும் முடிந்து விட்டன. வெளிநாடுகள் முன்பு போல் இனி பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால் நாங்கள் சம்பாதிப்போம்.

கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் நிறுவனங்களும் தாங்கள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை வைத்திருக்க விரும்புகின்றன. ஏனென்றால் புதிய ஒப்பந்தம் செய்தால் அது இதை விட மிகவும் மோசமாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே, உச்ச நீதிமன்றத்தின் துரதிர்ஷ்டவசமான தீர்ப்புக்கு முன்பு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய அதே வெற்றிகரமான பாதையில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். வரிகளை உறுதிப்படுத்த மாற்று சட்டங்களை பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமில்லை.

இப்போது நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. உலகின் நம்பர்-1 தீவிரவாத ஆதரவாளரான ஈரான், தனது உள்நாட்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 32,000 பேரை கொன்று குவித்துள்ளது. ஏற்கனவே அணு ஆயுதம் தயாரித்து ஐரோப்பாவை மிரட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் அடுத்த கட்டமாக அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்களுடைய ஆயுதத் திட்டத்தை, குறிப்பாக அணு ஆயுதங்களை மீண்டும் தயாரிக்கும் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டாலும், அவர்கள் தொடர்கிறார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
நாடாளுமன்ற உரையை அவர் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் நிகழ்த்தினார். அமெரிக்க வரலாற்றில் அதிபரின் நீண்ட நேர நாடாளுமன்ற உரை இது. கடந்த 2000ல் பில் கிளிண்டனின் 1 மணி நேரம் 29 நிமிட சாதனையை முறியடித்தார்.

* ‘பாக். பிரதமர் செத்திருப்பார்’
அதிபர் டிரம்ப் வழக்கம் போல இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசினார். 8 போர்களை நிறுத்தியதாக கூறிய அவர் அடுத்ததாக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசும் போது அவர், ‘நான் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இப்போரில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார்’ என தவறுதலாக குறிப்பிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், ‘‘போரை நிறுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். இப்போர் நடந்திருந்தால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் உயிரை காப்பாற்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்’’ என டிரம்ப் பேசினார்.

* சிறுமிக்கு கவுரவம்
அதிபர் டிரம்ப் தனது பேச்சின் போது, அவைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சிறுமி தலிலா கோல்மன் என்பவரை கவுரவப்படுத்தி பேசினார். கடந்த 2024ல் இந்திய டிரைவர் ஓட்டி வந்த லாரி மோதி சிறுமி தலிலா படுகாயமடைந்தார். அவரால் இனி நடக்க முடியாது, பேச முடியாது என டாக்டர்கள் கைவிரித்த நிலையில் தனது கடின முயற்சி மூலம் தடைகளை தாண்டி சிறுமி தலிலா தற்போது நடக்கவும், பேசவும் செய்து சகஜ வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார். அவரை குறிப்பிட்ட டிரம்ப், ‘‘ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோத குடியேறியான வெளிநாட்டு டிரைவர் ஒருவருக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ஆங்கிலம் பேசத் தெரியாத, படிக்கத் தெரியாத, அடிப்படை சாலை விதிகளை புரிந்து கொள்ளத் தெரியாத இதுபோன்ற பல சட்டவிரோத குடியேறிகளுக்கு கனரக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தை தடுக்க தலிலா சட்டம் என்ற சட்டத்தை இயற்ற இந்த நாடாளுமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். பல போராட்டங்களை தாண்டி இன்று ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தலிலா நமக்கு தன்னம்பிக்கை நட்சத்திராக நிமிர்ந்து நிற்கிறார்’’ என்றதும் அவையில் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

Tags : Supreme Court ,President Trump ,US Parliament ,Washington ,US ,
× RELATED அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் சக...