பாலக்காடு : தந்தையை மரக்கட்டையால் அடித்து கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் அருகே உள்ள குனத்தரையைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (63). இவரின் மகன் மனோஜ் (33). இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மதுபோதையில் பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்த வந்தார்.
கடந்த ஞாயிறன்றும் இரவு தகராறில் ஈடுப்பட்டார். அப்போது மகனை தந்தை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையை மனோஜ் மரக்கட்டையால் அடித்து கொல்ல முயன்றார். தலையில் பலமாக தாக்கப்பட்டதால் உன்னிகிருஷ்ணன் மயங்கியநிலையில் வீட்டிற்குள் விழுந்துக்கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றபின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உன்னிகிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் சிகிச்சைப்பெற்று வருகிறார். தந்தையை கொல்ல முயன்ற மனோஜ் தலைமறைவானார். அவரை நேற்று முன்தினம் மதியம் ஷொர்ணூர் டவுன் பகுதியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையி்ல் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
