×

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்வயர்களால் ஆபத்து

ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்தூர் அருகே விவசாய விளை நிலங்களில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால், கதிர் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் கம்பங்கள் விளை நிலங்களுக்குள் நடப்பட்டு மின் வினியோகம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெல் விவசாயம் செய்து தற்பொழுது மகசூலை எட்டி நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விதைப்பு செய்திருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தொடங்கி விட்டது.

விளை நிலங்களுக்குள் ஊன்றப்பட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி செல்வதால், கதிர் அறுவடை செய்ய வயல்களுக்குள் செல்லும் கதிர் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் செய்வதில் சிக்கள் ஏற்பட்டுள்ளது. கதிர் அறுவடை இயந்திரம் இரும்பாலானது என்பதால், மின் கம்பிகளில் உரசினால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏதேனும் விபத்தில்லாமல் விவசாயத்தை அறுவடை செய்து முடிக்கும் நோக்கில் கதிர் அறுவடை இயந்திரங்களில் மின்கம்பிகள் உரசி விடாமல் இருப்பதற்காக, அறுவடை இயந்திரம் செல்லும் தடத்தில் உள்ள மின் கம்பிகளை கம்பு கட்டி தூக்கி விட்டு கதிர் அறுவடை இயத்திரத்தின் மூலம் அபத்தான நிலையில் மிகுந்த அச்சத்துடன் கதிர் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து வீடு கொண்டு செல்வதற்கும் சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மிகவும் பயமாக உள்ளது. இது போன்று தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பல முறை சம்மந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கூறியும் இன்று வரை எந்த சீரமைப்பு பணியையும் நடைபெற வில்லை.

இதனால் விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் விவசாயிகளின் நலன் கருதி வயல்வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களையும் விரைவாக சீரமைத்து தந்து உதவ சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.

Tags : R.S.Mangalam ,Anandur ,
× RELATED பவானி நகராட்சியில் ரூ.15.79 கோடியில்...