×

புதுத்துறை கிராமத்தில் விவசாயி வடிவமைத்த மயில் விரட்டி கருவிகள்

*வயல்வெளி பரிசோதனை நடந்தது

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன். தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள் பயிரை சேதப்படுத்தியதால் சுமார் 20 மூட்டைகள் நெல் மகசூலை இழந்தார்.

பயிர் செய்யப்பட்ட நிலத்தில் மயில்கள் நுழைவதைத் தடுக்கவும், பயிர் சேதத்தை குறைக்கவும், வீட்டில் வீணாக இருக்கும் பொருட்களை பயன்படுத்தி குறைந்த செலவில் விவசாயிகளால் பயன்படுத்தக் கூடிய இரண்டு புதுமையான காற்றுச் சுழற்சி ஒலிப்பான் மற்றும் ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவிகளை வடிவமைத்து தாமே உருவாக்கினார்.

அவற்றை ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் நிறுவி, மயில்கள் வயலுக்குள் வருவதைத் தடுத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை இல்லாமல் செய்து வெற்றி கண்டார்.அவற்றில், காற்றுச் சுழற்சி ஒலிப்பான் கருவி, மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும் போல்டுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காற்றாலை தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கருவி, காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான ஒலியை எழுப்பி, மயில்களை அச்சுறுத்தி வயலுக்குள் வராமல் தடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மயில்கள் வயலுக்குள் வருவதைத் தடுக்க மேலும் ஒரு ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவி, சூரிய ஒளியை பிரதிபலிக்க கண்ணாடி குவளைகள் மற்றும் வீசும் காற்றைப் பயன்படுத்தி ஒலி எழுப்ப உலோக வளையங்களை கொண்டு அவரால் தயாரிக்கப்பட்டது.

கணேசன் மயில் விரட்டி கருவிகளை நேரடியாக களத்தில் பார்வையிட்டு பரிசோதனை, மதிப்பீடு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்ய, பிற விவசாயிகள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் 12 மாணவர்கள் மற்றும் 17 மாணவிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆனந்த்குமார் வழிகாட்டுதலின்படி நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.முன்னோடி விவசாயிகள் பலர் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்துகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அனந்தகுமார் பேசுகையில், விவசாயத்தை வெகுவாக பாதித்தாலும், மயில் தேசியப் பறவை என்பதால் அதை யாரும் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது. அதனால், வயலுக்குள் மயில்கள் வராமல் தடுக்கும் கணேசன் காற்றுச் சுழற்சி ஒலிப்பான் மற்றும் ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனினும், கூடுதலாக ஆராய்ச்சி செய்து அந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம் என்றார்.

இயற்கை விவசாயி பாஸ்கர் பேசுகையில், அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வயலில் நீர் தேங்கி வைத்தல் மயிலின் தாக்குதலைக் குறைக்கலாம்.மேலும், சீயாத்தமங்கை கிராம விவசாயி தமிழ்வளவன் பேசுகையில், மயில் விரட்டிக் கருவிகள் இரவிலும் எழுப்பும் ஓசை எலிகளை கட்டுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கள ஆய்வின் விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளை மாணவர்கள் யோகப்பிரியா, லாவண்யா, சந்தியா, தமிழ்மாறன், ஸ்ரீராம் சாம் ஆகியோர் பதிவு செய்து ஆவணமாக்கினர். விவசாயிகளுக்கு உதவும் விதமாக கூட்டக் குறிப்புகளை சிவசக்தி மற்றும் சரோஷ்ணி தயாரித்தனர்.முன்னதாக மாணவர் சேரன் அனைவரையும் வரவேற்றார். மாணவி அக்க்ஷதா நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags : Pudthurai village ,Karaikal ,Ganesan ,Pudthurai ,Karaikal district ,
× RELATED பவானி நகராட்சியில் ரூ.15.79 கோடியில்...