பிரிஸ்பேன்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து இந்திய வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பிரதிகா ரன் எடுக்காமல் எல்பிடபிள்யு ஆகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த ஷபாலி வர்மா டார்சி பிரவுன் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு அதிரடி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகசும் 8 ரன்னில் ஆட்டமிழந்து சொதப்பினார். 52 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து இந்தியா தவித்த நிலையில் மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணை சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் மந்தனா 58 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த தீப்தி சர்மா 2, ரிச்சா கோஷ் 23 ரன்னில் ஆட்டமிழக்க, அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்மன்பிரித்தும் 53 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த காஷ்வீ கவுதம் 43 ரன்னில் ரன் அவுட்டானார். 48.3 ஓவரில் இந்திய மகளிர் 214 ரன்னுக்கு ஆல்அவுட்டாகினர். ஆஸி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3, மேகன் சூட் 2 விக்கெட் எடுத்தனர். பின், 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி மகளிர் களமிறங்கினர்.
துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஆலிஸா ஹீலி 50 ரன்னிலும், மற்றொரு துவக்க வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் 32 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ஜார்ஜியா வால் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். இருப்பினும் பெத் மூனி 79 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 76 ரன் குவித்து ஆஸி வெற்றிக்கு வழிவகுத்தார். 37.5 ஓவரில் ஆஸி 4 விக்கெட் மட்டுமே இழந்து 217 ரன்கள் விளாசி, 6 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அன்னபெல் சதர்லேண்ட் 42 பந்துகளில் 42 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
