×

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி இருந்தால் கதையே வேற… நிச்சயம் வெற்றிபெற வைத்திருப்பார்: பாக். மாஜி வீரர் தன்வீர் அகமது பேட்டி

மும்பை: டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். பவர்ப்ளேயில் முன்னணி வீரர்கள் தடுமாறியதால், அடுத்தடுத்து வந்தவர்கள் ரன் குவிக்கும் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி ஆகும். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஐசிசி தொடர்களில் சந்தித்த முதல் தோல்வியும் இதுவே.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது கூறுகையில், ‘‘விராத் கோஹ்லி அணியில் இருந்திருந்தால், இந்த இலக்கை இந்தியா அழகாக சேஸ் செய்திருக்கும். இந்த இந்திய அணி கோஹ்லியின் தோள்களில் சவாரி செய்தே பழக்கப்பட்டது. ஓவருக்கு 12-13 ரன்கள் தேவைப்படும்போது எப்படி ஆட வேண்டும் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். பல போட்டிகளில் கோஹ்லி இன்னிங்ஸை தாங்கிப் பிடித்ததால்தான் மற்றவர்களால் எளிதாக ரன்களை எடுக்க முடிந்தது.

கோஹ்லி நிலைத்து நின்று விளையாடினால், மற்றவர்களும் அவரைப் பின்தொடர்வர். ஆனால் அவர் இப்போது அணியில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவு. பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்துவதில் ரோஹித் சர்மாவும் வல்லவர். விராத் கோஹ்லி இந்திய அணியில் இருந்திருந்தால் கதையே வேற… நிச்சயம் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார்’’ என்றார்.

 

Tags : Kohli ,South Africa ,Pak ,Tanvir Ahmed ,Mumbai ,Super 8 round ,T20 World Cup ,
× RELATED ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை அட்டவணை