×

ஜெயலலிதா பிறந்தநாள்விழா நலத்திட்ட உதவிகள் புடவை வாங்க முண்டியடித்த போது தள்ளு- முள்ளு

திண்டிவனம், பிப். 25: அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கடும் தள்ளு- முள்ளு ஏற்பட்டதோடு, ஒருவருக்கொருவர் முண்டியடித்து புடவைகளை வாங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுக ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமையில் நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு சில பொதுமக்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து மேடையில் ஏறி நலத்திட்ட உதவிகளை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் மேடையில ஏறி நலத்திட்ட உதவிகளை வாங்க சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து சிலர் படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : Jayalalithaa ,Tindivanam ,AIADMK ,Chief Minister ,
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி