சேலம், பிப்.25: சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் வீராணம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்ேதகப்படும் வகையில் இருந்த 4 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 2.5 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அல்லிகுட்டையை சேர்ந்த சாரதி (21), கங்காபுதூரைச் சேர்ந்த சஞ்சய் (19), தைலானூர் பள்ளிப்பட்டியை சேர்ந்த தமிழரசன்(27), அரமனூர் சுக்கம்பட்டியை சேர்ந்த அருண்குமார்(எ)சீனிவாசன்(24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டி மூனாங்கரடு தண்ணீர் டேங் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நெய்காரப்பட்டி பெரியகளத்தை சேர்ந்த விஷால்(28), சண்முகாநகர் வேலுபுதுத் தெருவை சேர்ந்த நாகராஜ்(22), ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2.5 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கிச்சிப்பாளையம் அடுத்த காளிகவுண்டர் காடு ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சித்துராஜ் (30) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டையாம்பட்டி அடுத்த கண்டர்குல மாணிக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக நவாப்மேடு பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (29) என்பவரை கைது செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், அவரிடம் இருந்து 5.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
