×

அணைகளில் போதுமான நீர் இருப்பு கோடையில் மின் உற்பத்தி பாதிக்காது

மஞ்சூர் : அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பில் உள்ளதால் கோடையில் மின் உற்பத்தி பாதிக்காது என மின்வாரிய தரப்பில் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்கண்ட மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், குந்தா மின் நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின் நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லுார் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின்நிலையத்தில் 40 மெகாவாட், காட்டுகுப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின்நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின்நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின் நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின் நிலையத்தில் 36 மெகாவாட், மரவகண்டி மின்நிலையத்தில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீத மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின் தேவை அதிகமாக உள்ள ‘பீக்அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின் தேவையை மேற்படி நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மின்சார உற்பத்திக்கு பின் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றபடும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பரவலாக பெய்த மழையால் அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்தது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பாவனி அணை பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையில் நேற்றைய நிலவரப்படி 208.8 அடி நீர் இருப்பில் உள்ளது. இதேபோல், குந்தா அணையில் மொத்த கொள்ளளவான 89 அடியில் தண்ணீர் இருப்பு 87.2 அடியாக உள்ளது. இதனால் வரும் கோடை காலத்தில் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nilgiri district ,Upper Bhavani ,Avalanche ,Emerald ,Baikara ,Klanmarken ,
× RELATED தரமான சாகுபடி செய்வதன் மூலம் தேயிலை கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை