×

அமைதியான தமிழகத்தில் 4 கட்டமாக தேர்தல்..? அலப்பறை அஜிதா

‘‘பைக்கில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்தபடி சுடச்சுட காபி குடிக்க டீ கடைக்கு அஜிதா வர, அங்கே அவருடைய நீண்ட கால நண்பரை திடீர்னு பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தாரு.. தொடர்ந்து, இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்புறம் என்ன ‘‘அரசியல் கள நிலவரம் சுறுசுறுப்பாக போயிக் கொண்டு இருக்கிறதே என நண்பர் கேட்டார்.. வேறு ஏதாவது சீக்ரெட் தகவல் இருக்கிறதா என கேட்க, இருக்கிறதே… என காபி குடித்த உற்சாகத்தோடு, கள நிலவத்தை சொல்ல ஆரம்பித்தார் அஜிதா,

‘‘காவல்துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த அதிமுகவினர் தயாராகி வருகிறார்களாம்… அதாவது, ‘‘ஐஜிக்கள், சரக டிஐஜி, எஸ்பி மற்றும் மாநகரங்களில் நுண்ணறிவு உதவி ஆணையர்கள் (ஐஎஸ் ஏசி) என இருக்கிறார்கள்… தேர்தல் தேதி அறிவித்ததும், அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சியினர் தேர்தல் உயரதிகாரியை சந்தித்து, காவல்துறையில் குறிப்பிட்ட அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளிக்க உள்ளார்களாம்… இதற்கான வேலையில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்… குறிப்பாக, மத்திய மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலங்களில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் விவரங்களை அதிமுகவினர் சேர்த்து உள்ளார்களாம்… அதிமுகவினர் நினைப்பது நடக்குமா? என்பதை பொறுந்திருந்து தான் பாக்க வேண்டும்… தேர்தலில் கள நிலவரம் அதிமுகவிக்கு சாதகமாக இல்லாததால், எதையாவது செய்ய வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்களாம்…’’ என்றபடியே காபியை குடித்து முடித்தார் அஜிதா.

‘‘அப்புறம் என்ன தமிழ்நாட்டில் பல கட்டமாக தேர்தல் நடத்தி திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிடுவதாக பேச்சு வருதே..’’ என்றார் நண்பர். ‘‘தமிழகம் எப்போதுமே அமைதியான மாநிலமாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் குற்றங்கள் குறைந்து போச்சு.. முன்பெல்லாம் ரவுடிகள் மோதலில் கொலை, ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கும். ஆனா, தற்போது குற்றங்கள் குறைந்து விட்டதால், அடி,தடி சண்டை எல்லாம் வீடியோவாக வெளியிட்டு பெரிய செய்தியாக போடும் நிலைதான் தற்போது இருக்கு.. அமைதி மாநிலம் என்பதால் தொழிற் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க நடவடிக்கை எடுத்து வர்றாங்க..

இந்நிலையில, தமிழகத்துல தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திட்டு வருது..தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் எப்போது தேர்தல் நடந்தாலும் ஒரே கட்டமாகத்தான் நடக்கும். ஆனால், தற்போது மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் போன்ற கலவரம் ஏற்படும் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தலாம்னு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திட்டு வருகிறதாம்.. பல கட்டங்களாக நடந்தால் 234 தொகுதிக்கும் வெளி மாநிலத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக போட திட்டமிட்டுள்ளார்களாம்.. தாசில்தார் அளவில்தான் தேர்தல் அதிகாரிகள் இருப்பாங்க.. பார்வையாளர்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் வந்து உத்தரவிட்டால் தேர்தல் அதிகாரிகளாக உள்ள தாசில்தார்கள் பயந்து செய்வார்கள்னு நினைக்கிறாங்களாம்.. பல கட்டங்களாக நடந்தால் தமிழகத்தில் தாங்கள் நினைத்தபடி தேர்தலை நடத்தலாம்.. திமுக கூட்டணி கட்சிகளை செயல்பட விடாமல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து நெருக்கடி கொடுக்கலாம்னு நினைக்கிறார்களாம்.. இதனால் பல கட்ட தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செஞ்சிருக்காங்களாம்.. இந்த தகவல் தெரியவந்ததால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்ட தேர்தல் நடத்த வேண்டும்னு தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்..’’ என தெரிவித்தார் அஜிதா.

‘‘குக்கரின் மாஸ்டர் பிளான் தெரிந்து சேலத்துக்காரர் அதிர்ச்சியில் இருக்காராமே..’’ எனக்கேட்டார் நண்பர்.
‘‘தேர்தலில் போட்டியிட மாட்டேன் என குக்கர்காரர் சொன்னதின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறதாம்.. ஏற்கனவே மம்மி மறைந்த பிறகு நடந்த இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றவர். அதே தோரணையுடன் கடந்த தேர்தலில் தனக்கு பலமாக இருக்கும் என கருதி கோவில்பட்டி தொகுதியில் குதிச்சாரு.. எப்படியும் தான் வெற்றி பெற்று விடுவோம், சேலம்காரரை ஒரு கை பார்த்து விடலாம் என்ற கனவில் தான் குக்கர்காரர் களம் கண்டார். ஆனால் அந்த மண்ணின் மைந்தரான கடம்பூர்காரரிடம் மண்ணை கவ்விட்டார்.

இந்த தேர்தலில் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறியவர் கடைசியில் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல அந்த கூட்டணியிலேயே போய் ஒட்டிக்கொண்டார். அதனால் தேர்தலில் இலை கட்சியை ஆதரித்து தான் பிரசாரம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்தலில் வலம் வந்து பிரசாரம் செய்து இழந்த இலை செல்வாக்கை மீட்டெடுப்பது தான் அவரது எண்ணமாம்.. இதன் மூலம் இலை கட்சியினருடனான தனது உறவை புதுப்பித்துக்கொள்ள நினைக்கிறாராம்.. தனது செல்வாக்கை டெல்லிக்கு காட்டி சேலம்காரரை வீழ்த்த திட்டம் போடுகிறாராம்.. தேர்தலில் சேலம்காரர் சறுக்கினால், அந்த கேப்பை பயன்படுத்தி டெல்லி உதவியுடன் இலை கட்சியை கைப்பற்றி விடலாம் என குக்கர்காரர் நினைக்கிறாராம்.. எனவே தான் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என குக்கர்காரர் சொல்லியிருக்காராம்.. அவரது மாஸ்டர் பிளானை அறிந்த சேலம்காரர் அதிர்ச்சியடைந்துள்ளாராம்..’’ என்ற தகவலை தெரிவித்து விட்டு அடுத்த ரவுண்டுக்கு
கிளம்பினார் அஜிதா.

Tags : Tamil Nadu ,Ajitha ,Alapara ,
× RELATED அமமுகவை உடைக்க சசிகலா திட்டம்