×

நானும் சினிமாவுல உச்சத்துலதான் இருந்தேன்: விஜய் போட்டியிலேயே இல்லை… கனவு வேணும்னா காணலாம்! தமிழக பாஜ துணைத் தலைவர் நடிகை குஷ்பு

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு முன்னணி நடிகை என்ற வகையில் இந்த மாநிலங்களில் உங்கள் பிரசாரம் எந்த அளவில் இருக்கும்?
கட்சித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறினால், கண்டிப்பாக செல்வேன். அது அசாம், மேற்கு வங்கம் அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி போவேன். கட்சிக்கு உழைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே பணியாகும். தமிழகத்தை பொறுத்தவரை எந்தெந்த தொகுதிகளுக்கு போக போகிறோம் என்பது தெரியவில்லை. அனைத்தும் முடிவான பிறகு, கண்டிப்பாக கட்சி சார்பாக இரண்டு பேரும் அதிமுக, பாஜகவும் இணைந்து முடிவு பண்ணுவோம்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் இணைந்தீர்கள். அப்போது உங்கள் பணி சிறப்பாக இருந்தது. பின்னர் அண்ணாமலை தலைவராக வந்த பிறகு நீங்கள் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறதே?. தற்போது புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் வந்திருக்கிறார். அவரின் தலைவர் பதவி எந்த
அளவுக்கு உள்ளது?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, ஒவ்வொரு தலைவரிடமும் பணியாற்றுவது என்பது ஒரு விதமாக இருக்கும். சில பேர் வந்து வேற மாதிரி, எல்லோர் முன்னாடி முன்னணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் அவர்கள் பாணியில் பிரசாரம் செய்வார்கள். தலைவர்கள் அவர்கள் விருப்பப்படி கட்சியை நடத்த சுதந்திரம் உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும்போது சிலருக்கு அப்படி தோன்றலாம். அண்ணாமலை தலைவராக இருந்த நேரத்தில், நான் தேசிய மகளிர் ஆணையத்தில் (என்சிடபிள்யூ) உறுப்பினராக இருந்தேன் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு மகளிர் ஆணையத்தில் பொறுப்பில் இருக்கும்போது, கட்சி ரீதியாகப் பணியாற்ற முடியாது. நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தது. ஒன்று அந்தப் பதவியில் தொடர வேண்டும் அல்லது அரசியல் செய்ய வேண்டும். எனக்கு அரசியல் தான் முக்கியம். தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக வந்துள்ளார். நான் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறேன். அந்தப் பதவிக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறேன்.

மாநிலத் துணைத் தலைவர் என்ற பதவியை மட்டும் கொடுத்து உங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். தேசிய அளவில் ஏதேனும் பொறுப்புக்கு எதிர்பார்த்தீர்களா?
எனக்காக அப்படி யார் பீல் பண்ணுகிறார்கள். எனக்காக அப்படி பீல் பண்றவங்க யார் என்று சொன்னீங்க என்றால் அவர்களுக்காக நான் நன்றி சொல்வேன். நான் வந்தவுடனேயே எனக்கு எல்லா பதவியும் தர வேண்டும் என்பது கிடையாது. நான் தேசிய அளவில் எந்த பதவியும் எதிர்பார்க்கவில்லை. அரசியல் மட்டுமல்ல எதிலும் எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் ஏமாற்றங்கள் தான் மிஞ்சும். ‘‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’’ என்பது மட்டும்தான் என் கொள்கை.

தமிழக சட்டசபை தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட போகிறீர்கள்?
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவதா?. அது தொடர்பாக ஒன்றும் தெரியவில்லை. எங்களுக்கு கட்சி வெற்றி பெற வேண்டும். எங்கள் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதுதான் முக்கியம். நான் ஜெயிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. இதுவரை யாருக்கும் தெரியாது. யார் எங்கே போட்டியிடுகிறார்கள் என்று. மூத்த தலைவர்களுக்கும் அது தெரியாது. நீங்கள் பிரச்சாரம் மட்டும் செய்யுங்கள் என்று கூறினால் பிரசாரம் மட்டும் செய்வோம். நீங்கள் இந்த இடத்தில் போட்டியிடுங்கள் என்று கூறினால் போட்டியிடுவோம்.

பாஜவில் பல பிரபலங்களுக்கு மாநிலங்களவை உள்ளிட்ட பதவிகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்?. அப்படி நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கிறீர்களா?
ஒரு நடைமுறை இருக்குங்க. எந்தப் பிரபலங்களுக்கு அப்படி கொடுத்தார்கள்? கங்கனா ரனாவத், ஹேமமாலினி போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். ஹேமமாலினி மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளார். கொடுத்தார்கள் என்றால் நம்ம மாநிலத்தில் இருந்து இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதவி கொடுத்தது என்பது ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்ட பதவி.

நடிகர் விஜயின் புதிய அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து என்ன?
நடிகர் விஜய் இப்பதான் வந்திருக்கிறார். அதற்குள் நாம் ஏன் முடிவு பண்ண வேண்டும்? அவர் இன்னும் போட்டியிடவில்லை. வரட்டும், எல்லாமே வரட்டும். பார்க்கலாம். அவர் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார். அது அவருடைய விருப்பம். அவர் ஒரு கட்சியின் தலைவர். அவருக்கு அந்த நம்பிக்கை உள்ளது. அது நல்ல முடிவா? தவறான முடிவா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது. மக்கள் முடிவு செய்ய வேண்டும். நானும் சினிமாவில் உச்சத்தில் தான் இருந்தேன். என் காலத்தில் சமூக ஊடகங்கள் என்பது இல்லை. பிஆர் பணிகள் கிடையாது. இப்போது சமூக ஊடகங்கள் இருக்கிறது. பேஸ்புக், டுவிட்டர் என்று நிறைய உள்ளது. அப்போது எதுவும் கிடையாது. இருந்தாலும் அவ்வளவு காலம் நாங்கள் சினிமா உச்சத்தில் நின்று இருக்கிறோம். காலம் மாறியிருக்கிறது. விஜய் இன்று மிகப்பெரிய ஸ்டார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ரஜினி சாருக்கு இருந்த அந்த பீவர், இன்று விஜய்க்கு இருக்கிறது. அவர் ஆசைப்படுவதில் தவறில்லை.

ரசிகர்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா?
ரசிகர்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதா?. பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுமா? கூட்டணி ஆட்சி சாத்தியமா? என்பதைப் பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமியும், எங்கள் கட்சித் தலைமையும் இதை முடிவு செய்வார்கள். வழக்கமாகவே நம் பிரதமர் மோடி பெண்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது இந்திய வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. டெல்லி முதல்வராக உள்ளவர் முதல் முறை எம்எல்ஏ. அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். மும்பையில் பெண் ஒருவருக்கு மேயர் பதவி வழங்கினார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் பிஜேபியோட வேலை. தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தின் பாஜ தலைவராக நியமிக்கப்பட்டார். திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கியுள்ளோம். பிரதமர் மோடி ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு அந்த உயர்ந்த பதவியை வழங்கியுள்ளார். எனவே, பாஜகவில் பெண்களுக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும். என்றைக்கும் பெண்களுக்கு பிஜேபியில் முக்கியத்துவம் இருக்கும்.

இந்தத் தேர்தலில் போட்டி யாருக்கு இடையே இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழக சட்டசபை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். போட்டி என்று பார்த்தால், அது திமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடையேதான் இருக்கும். விஜய் போட்டியிலேயே இல்லை. விஜய் திமுகவைத் தான் எதிரி என்று சொல்லி இருக்கிறார். பாஜவை அவர் எதிரி என்று சொல்லவே இல்லை.

Tags : Vijay ,Tamil Nadu ,BJP ,Vice President ,Khushbu ,Kerala ,West Bengal ,
× RELATED அமமுகவை உடைக்க சசிகலா திட்டம்