தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி ஏறக்குறைய அஸ்தமனம் ஆகும் வேளை. வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக தங்களின் காலனி ஆட்சியை நிறுவிக்கொண்டிருந்தனர். சில பகுதிகளில் மன்னர்களே மனமுவந்து வழங்கிய இடங்களில் கோட்டைகளை நிறுவி கோேலாச்ச ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் தற்போதைய தமிழக பகுதிகளுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை இணைத்து மதராஸ் ராஜதானி (சென்னை ராஜதானி) என்ற பெயரில் நிர்வகித்துவந்தனர். இந்த நிர்வாக வசதிக்கான தலைமையிடம்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. கோட்டையும், மதராஸ் ராஜதானியும் பிரெஞ்சுக்காரர்களுக்கா? ஆங்கிலேயர்களுக்கா? என்ற குடுமிப்பிடி சண்டையும் அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது. ஆனால் இறுதியாக ஆங்கிலேயர்களுக்கே என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மதராஸ் ராஜதானியை நிர்வகிக்க அவ்வப்போது தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வில்லியம் கிஃபோர்ட் என்பவர்தான் மதராஸ் மாகாணத்தின் முதல் தலைவர். இவரைத் தொடர்ந்து வேறு சில தலைவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அதேபோல வேறு சில நிர்வாக பதவிகளையும் தங்கள் நாட்டவர்க்கே தந்து அழகு பார்த்தது பிரிட்டிஷ் அரசு. இதற்கு இடையே இந்திய மனங்களில் விடுதலைத்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், சில பதவிகள் நம்மவர்களுக்கு வந்துசேரத்தொடங்கின. 1947ல் இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைத்துவிட்டு கப்பலேறி போய்விட்டார்கள் வெள்ளையர்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய ஆட்சி நிர்வாகம் அப்படியே இருந்தது. மதராஸ் ராஜதானியும் அப்படியே இருந்தது. ஆனால் சென்னை மாகாணம் என்ற பெயரே பலரால் உச்சரிக்கப்பட்டது.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக பொதுத்தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 1951 முதல் மார்ச் 1952 வரை அத்தகைய தேர்தல் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாகவே நடத்தப்பட்டது. அந்தத் தருணத்தில் சென்னை மாகாணம் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் – கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கியிருந்ததால் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 309 ஆக இருந்தது. இதுதவிர, 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகளும் இருந்தன.
மொத்தமாக 375 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பகுதியில் 190 உறுப்பினர்களும், ஆந்திரப் பிரதேச பகுதியில் 143 பேரும், கர்நாடகப் பகுதியில் 11 பேரும், கேரளப் பகுதியில் 29 பேரும் இடம்பெற்றிருந் தனர். மொத்தமுள்ள 375 தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
சென்னை மாகாணத்தில் அப்போது நடந்துவந்த காங்கிரஸ் ஆட்சியில் பல பிரச்னைகள் இருந்தாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே வலுவான கட்சியாக இருந்தது. அடுத்த இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. துவக்கத்தில் ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்த அக்கட்சி, அப்போது தேர்தல் அரசியலை நோக்கித் திரும்பியிருந்தது. இந்த இரண்டு பிரதான கட்சிகள் தவிர, த.பிரகாசம் தலைமையில் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, க்ருஷிகார் லோக் கட்சி, விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, பி.டி.ராஜன் தலைமையில் நீதிக்கட்சி, பொதுவுடைமைக் கட்சி, சென்னை மாநில முஸ்லீம் லீக், ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்தன.
1946லிருந்து 1951க்குள் மூன்று முதல்வர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். முதலில் த.பிரகாசம் ஓராண்டு முதல்வராக இருந்தார். பிறகு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். பிறகு, பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வரானார். அதிருப்தியில் இருந்த த.பிரகாசத்தின் ஆதரவாளர்கள் 1951ல் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியில் சேர்ந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் ஆதரவளிக்க முன்வந்தது. அப்போது உருவாகியிருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தங்கள் கொள்கைகளை ஏற்கும் பிற கட்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால், தங்களுடைய மூன்று கொள்கைகளை ஆதரிப்பதாக உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமெனக் கூறியது.
அதன்படி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும், காமன்வீல் கட்சியும் நிபந்தனைப் படிவத்தில் கையெழுத்திட்டு, ஆதரவைப் பெற்றன. சில கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும் திமுக ஆதரவளித்தது. அதன்படி, 43 வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவளித்தது. மொத்தமுள்ள 375 இடங்களில், 367 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 131 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. மற்ற கட்சிகள் செல்வாக்கு உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தின. இந்தத் தேர்தலில் 21 வயது நிரம்பிய எந்தவொரு ஆணும் பெண்ணும் வாக்களிக்க முடியும் என புதிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியது. ஆகவே இந்தத் தேர்தல்தான் பலருக்கும் முதல் தேர்தலாக இருந்தது. அந்த காலகட்டத்தில் பலரும் கல்வியறிவு குறைவானவர்களாக இருந்த நிலையில், அப்போதைய இந்தியத் தேர்தல் ஆணையரான சுகுமார் சென், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்.
வாக்குச் சாவடியில், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்கான பெட்டியில் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் நடந்த இந்தத் தேர்தலுக்காக 24,73,850 பெட்டிகள் செய்யப்பட்டன. 8,200 டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டது. வாக்களித்தவரே திரும்பவும் வாக்களித்துவிடாமல் இருக்க, கையில் மை வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 1952 ஜனவரி 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 58 சதவீத வாக்குகள் பதிவாகின. முடிவுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகின.
தேர்தல் முடிவுகள் வெளியானது 367 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 152 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் கட்சி, கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த சுயேச்சைகள், தமிழ்நாடு தொழிலாளர் கட்சி, காமன்வீல் கட்சி, நீதிக் கட்சி ஆகியவை த.பிரகாசம் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இணைந்தனர். தங்களுக்கு 166 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமெனக் கோரினார். ஆனால், ஆளுநர்பிரகாசா இதற்கு மறுத்துவிட்டார்.
இதற்குப் பிறகு, 1952 ஏப்ரல் ஒன்றாம் தேதி காங்கிரசிற்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். பெரும்பான்மை இல்லாத நிலையில், அரசை வழிநடத்திச் செல்ல சரியான முதலமைச்சரைத் தேடத்தொடங்கியது அக்கட்சி. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வகித்து ஓய்வுக்குப் பின் குற்றாலத்தில் தங்கியிருந்த ராஜாஜியை முதல்வராக்க முடிவெடுக்கப்பட்டது. உடனடியாக பெரும்பான்மை உறுப்பினர்களைத் திரட்டும் பணியைத் துவக்கினார் ராஜாஜி. எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி காங்கிரசில் இணைக்கப்பட்டது. மேலும் சில சுயேச்சைகளும் வந்துசேரவே, காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது.
ராஜாஜி தலைமையில் அமைந்த தமிழ்நாட்டின் முதல் அமைச்சரவையில் சி.ராஜகோபாலாச்சாரியார், ஏ.பி.செட்டி, சி.சுப்ரமணியம், கே.வெங்கடசாமி நாயுடு, என்.ரங்காரெட்டி, எம்.வி.கிருஷ்ணாராவ், வி.சி.பழனிசாமி கவுண்டர், யு.கிருஷ்ணாராவ், ஆர்.நாகன கவுடா, என்.சங்கரரெட்டி, எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர், கே.பி.குட்டி கிருஷ்ணன் நாயர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி, எஸ்.பி.பி. பட்டாபி ராமாராவ், டி.சஞ்சீவய்யா ஆகிய அமைச்சர்கள் இடம் பெற்றனர்.
