×

சிதம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

*பொதுமக்கள் எதிர்ப்பு-பரபரப்பு

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு இந்திரா நகர், முத்தையா வாய்க்கால் ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன்பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் பட்டாவுடன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வீடுகளை அகற்ற நேற்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள், தற்போது மாணவர்களுக்கு தேர்வு நேரம் நடைபெற்று வருவதால், இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை  வைத்தனர்.

அதனை ஏற்று, தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை தற்காலிகமாக அகற்றாமல் மீதமுள்ள 18க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக சிபிஎம் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், தமிழ்மாநில காங்கிரஸ் மாநில நிர்வாகி வேல்முருகன், மாவட்டத் தலைவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chidambaram ,Muthaiah canal ,Indira Nagar ,Ward 33 ,Chidambaram Municipality ,
× RELATED அந்தியூர் வாரச்சந்தையில் 2 நாட்களில் ரூ.1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை