×

பாளை வேய்ந்தான்குளம் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

*கடைகளில் காசு கொடுத்து வாங்குவதால் வாட்டர் பாட்டில் விற்பனை படுஜோர்

நெல்லை : நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிப்பதால் வாட்டர் பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை வேய்ந்தான்குளத்தில் நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.48 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இங்கு ஏற்கனவே 4 பிளாட்பாரங்கள் இருந்த நிலையில் கூடுதலாக இரு பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு 6 பிளாட்பாரங்களுடன் புதிய பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த 6 பிளாட்பாரங்களிலும் மொத்தம் 44 கடைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் 78 பஸ்களை நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.

எனவே இங்கிருந்து சென்னை, மதுரை, ேகாவை, வேலூர், திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்களில் சென்று பயணத்தை தொடர்கின்றனர். இவ்வாறு வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் நலன்கருதி பொது கழிவறை, கட்டண கழிவறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்பொருட்டு இங்குள்ள 6 பிளாட் பாரங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கப்பெறும் குடிநீரை பொதுமக்கள் பாட்டில்கள் மூலம் பிடித்து சென்று தாகம் தணித்து பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால் ஏனோ கடந்த பல மாதங்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோனது. வெறும் காற்று மட்டுமே வருவதால் குடிநீர் குழாய்கள் காட்சி பொருளாக மாறிவிட்டன.

மேலும் அதன்அருகே காலியான வாட்டர் பாட்டில்கள், குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. மேலும் மாநகராட்சி மூலம் சின்டெக்ஸ் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் விற்கப்படும் வாட்டர் பாட்டில்களை காசு கொடுத்து வாங்கி குடிப்பதால் வாட்டர் பாட்டில் விற்பனை படுஜோராக நடக்கிறது.

இவ்வாறு காசு கொடுத்து வாங்குவோரில் சிலர் தண்ணீர் பாட்டில்களை குடித்தபிறகே ஆங்காங்கே வீசி செல்லும் அவலம் தொடர்வதால் நெல்லை புதிய பஸ்நிலைய பகுதிகளில் வாட்டர் பாட்டில்கள் குவிந்துக் கிடக்கின்றன. இதனிடையே பிளாட்பாரங்களில் கடைகளில் முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள், வடை சட்டிகள் ஆகியவற்றால் அங்கு நடந்துவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு நெருங்கிவரும் கோடைகாலத்திற்கு முன்பாக புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் தாகத்துக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் புதிய பஸ் நிலைய பகுதிகளில் நிலவும் பல்வேறு குறைகளையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆக்கிரமித்துள்ள டூ வீலர்கள்: ஆங்காங்கே டூவீலர் கள் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளேயே பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. முறையான பார்க்கிங் வசதிகள் இருந்தும் அதை பயன்படுத்துவதில்லை. பார்க்கிங் ஏரியாவும் போதுமான இட வசதியின்றி நிரம்பி வழிகிறது.

எங்கு பார்த்தாலும் துர்நாற்றம் சுகாதாரமற்ற நெல்லை புதிய பேருந்து நிலையம்

எங்கு பார்த்தாலும் துர்நாற்றம் அடிப்பதால் சுகாதாரமற்ற பேருந்து நிலையம் என்ற அந்தஸ்தை நெல்லை புதிய பேருந்து நிலையம் பெற்றதோடு பயணிகள் முகத்தை மூடியவாறே பஸ்சுக்கு காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களிடையே கடைகள்தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள கடைகளில் இருந்துதான் துர்நாற்றம் வெளியாகிறது.

டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் என பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்துள்ள கடைகளில் முழு சுகாதாரமற்ற உணவு பொருட்கள் என, கடைகளில் கொட்டப்படும் தண்ணீர் கழிவு நீர்களாக வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அங்கிருந்து வெளியேறும் துர்நாற்றம் பயணிகளை பஸ்சுக்கு காத்திருக்க முடியாமல் திணறடிக்கிறது.முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். இதனால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

Tags : Palai, Veyinthankulam ,Nellai ,
× RELATED மோர்ஸ் கார்டன் சிறுவர் பூங்காவில் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை