×

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் முதுமலையில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க துண்டு பிரசுரம்

*வனத்துறை தீவிர கண்காணிப்பு

ஊட்டி : கோடை காலம் துவங்கிய நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாத வகையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பதுடன் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோடை காலம் தொடங்கியதை அடுத்து முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள், நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட அப்பர்பவானி, கோரக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புற்கள், செடி, கொடிகள் மற்றும் மரங்கள் கருகி காயத் துவங்கியுள்ளன. இதனால், முதுமலை காப்பகத்தில் உள்ள விலங்கினங்கள் உணவு தேடி இடம் பெயர துவங்கியுள்ளன.

வனங்கள் காய்ந்து வருவதால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. காட்டு தீ ஏற்படாத வகையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக முதுமலையில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட சிங்காரா, மசினகுடி, மற்றும் சிகூர் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட வனத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டியும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

வாழைத்தோட்டம், மாயார், பூதநத்தம், செம்மநத்தம் ஆகிய கிராமங்களின் சூழல் மேம்பாட்டு மையம், ஆனைகட்டி, சிறியூர் ஆகிய கிராம வனக்குழுவினருடன் நடைபெற்ற கூட்டத்தில் காப்புக்காடுகளில் தீயினால் ஏற்படும் சேதம் மற்றும் அழிவுகள் குறித்தும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

மசினகுடி அரசு பள்ளியில் மாணவர்களிடையே வனத்தீ பற்றிய விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. கூடலூர் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் மசினகுடி பொதுமக்களிடையே தீ தடுப்புமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘மே மாதம் வரை கடுமையான வெயில் காலம் என்பதால் வனத்தை ஒட்டிய சாலைகள் வழியாக பயணிக்க கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டி சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 21ன் படி வன நிலத்தில் தீ வைத்தாலோ, தீ ஏற்பட காரணமாக இருந்தாலோ அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தீயினால் ஏற்பட்ட நஷ்ட ஈடும் சேர்த்து வசூலிக்கப்படும். வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவாகவோ தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தர வேண்டும்’ என்றனர்.

Tags : Mudumalai ,Department ,Mudumalai Tiger ,Reserve ,
× RELATED மோர்ஸ் கார்டன் சிறுவர் பூங்காவில் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை