சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை வழியாக ஏராளமான அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கனரக வாகனம் மற்றும் கார்கள் சென்று வருகின்றன. இதேபோல் திருக்கழுக்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
மாமல்லபுரம்-கோவளம் சாலை, தென்மாட வீதி, கலங்கரை விளக்க சாலை, அண்ணாநகர், கொக்கிலமேடு செல்லும் சாலை, கடற்கரை செல்லும் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் தெரு, ஒத்தவாடை தெரு, யானை கட்டி தெரு, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாடுகள் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.
இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. பைக்கில் செல்பவர்கள் திடீரென குறுக்கே ஓடும் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஒருசில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் சாலை நடுவே படுத்து உறங்குவதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்ற நகராட்சி ஊழியர் மாடு மீது மோதி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் மாடுகளால் 50க்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. இதில், அதிகமாக பாதிக்கப்பட்டோர் சுற்றுலா பயணிகள்.
மாடுகள் வீடுகள் முன்பு படுத்து ஓய்வெடுப்பதால் வீட்டின் உரிமையாளர்கள் அவசர தேவைக்கு தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் திணறுகின்றனர். மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி
யுறுத்தியுள்ளனர்.
