திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சன்யாட்சியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலவர் சிலையருகே நாடு நலம் பெறவும், ஊர் மக்களும், ஊரில் உள்ள கால்நடைகள் நோயின்றி வாழவும், மும்மாரி மழை பொழியவும் நத்தம் கிராம மக்கள் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு 1978ம் ஆண்டு வழிபாட்டு முறைப்படி 3 அடி ஆழத்தில் மண்பானையில் சுமார் 18 லிட்டர் இலுப்பை எண்ணெய்யை நிரப்பி சாதகம் செய்து, புதைத்து வைத்து அந்த இடத்தை ஊர் மக்கள் நாள்தோறும் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மண்ணில் சாதகம் செய்யப்பட்ட எண்ணெய் மண்பானை குடம் சிறப்பு பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டு 8 நாட்கள் விரதம் இருந்த பக்தர் ஒருவர் குடத்தினை தலையில் ஏந்தி சென்று கிராமத்தின் அருகிலுள்ள ஓடையில் சேர்ப்பித்தார்.
இதையடுத்து மீண்டும் கிராமம், கால்நடைகள், விவசாயம் செழிப்புடன் இருக்க எண்ணெய் சாதகம் செய்யும் விழா ஊர் பிரமுகரும், ஊராட்சி மன்ற தலைவருமான கரியச்சேரி சேகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கோயில் மூலவர் அருகே மண்ணில் 3 அடி நீள அகலம் மற்றும் 3 அடி ஆழத்தில் கடந்த முறை எண்ணெய் குடம் சாதகம் செய்யப்பட்ட அதே இடத்தில் அதே அளவுடன் பள்ளம் தோண்டப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கடந்த 5 நாட்களாக விரதம் இருந்த 20 பக்தர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் மண்பானையில் 18 லிட்டர் இலுப்பை எண்ணெய் ஊற்றப்பட்டு, மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்டது. இந்த வேண்டுதல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
