சென்னை: ஜெயலலிதாவால் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது சுயநலத்திற்காக செயல்படுகிறார்எ என ஓபிஎஸ்சை மறைமுகமாக டிடிவி தினகரன் சாடி உள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய மடல்: தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றனர். ஜெயலலிதா நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடுவோம் என சூளுரைத்தவர்களில் சிலர், இத்தனை காலம் தூக்கத்தில் இருந்துவிட்டு, தங்களின் சுயநலத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் தராததால், இன்று ஜெயலலிதா தொண்டர்களை ஏமாற்றி, அவர்களை துண்டாட நினைக்கிறார்கள்.
ஜெயலலிதாவால் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது தனது சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் எதிரணியிடம் விலைபோய் அவர்களோடு இணைய துடிக்கின்றனர். சட்டமன்றத்திற்குள்ளேயே தனது ஆதரவாளரை வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை அவ்விரு பெரும் தலைவர்களைப் போற்றி வணங்கிடும் கோடான கோடி தொண்டர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய சுயநல கூட்டத்திற்கு வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
