×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு போக்குவரத்து நெருக்கடியால் தினமும் திணறும் கோத்தகிரி

*வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

கோத்தகிரி : கோத்தகிரி நகரில் தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நகர் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இயற்கை அழகுடன் கூடிய நேர்த்தியான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதை வழியாக வனவிலங்குகளை கண்டுகளித்தவாறு செல்வதைத்தான் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

அதிலும், கோடை சீசன் காலத்தில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் வழிப்பாதை ஒருவழியாக மாற்றப்படும். அப்போது நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவே இயக்கப்படும். கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகன ஓட்டிகள் திரும்பி வருவதற்கும் இதே வழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதனால் கோத்தகிரி வழிப்பாதை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். பல வாகனங்கள் கோத்தகிரி நகருக்குள் வர நேரிடுகிறது. ஆனால், கோத்தகிரி நகர் பகுதியில் நகராட்சி சார்பிலோ, தனியார் சார்பிலோ உரிய வாகன நிறுத்துமிடம் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக வாகனங்களை முறையாக நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

அவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்லும் நிலைதான் நீடித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியால் கோத்தகிரி திணறி வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசன் காலங்களில் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது. ஊட்டியை போன்று கோத்தகிரியிலும் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், பஸ்களிலும் கோத்தகிரிக்கு வந்து செல்கின்றனர்.

கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனை பிரபலமானது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இங்கிருந்து தெங்குமரஹாடா வனப்பகுதி, பவானி சாகர் அணை, சமவெளிப் பகுதிகளை கண்டு களிக்கலாம்.

இதனால், சுற்றுலா பயணிகள் இந்த பகுதியை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது தவிர கேத்தரின் நீர் வீழ்ச்சி, ரங்கசாமி மலை, நேரு பூங்கா, உயிலட்டி நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு இடங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன.

இங்கு அதிகளவில் தேயிலை தோட்டங்களும் உள்ளன. மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக நெடுகுளா, கூக்கல்தொரை, மசக்கல், மிலிதேன், எரிசி பெட்டா பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மலைக்காய்கறிகளும், சுகுனி, புரூக்கோலி, சல்லாரை ஆகிய இங்கிலீஸ் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

இந்த இங்கிலிஸ் காய்கறிகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் விவசாய, வர்த்தக தொடர்புகள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக கோத்தகிரிக்கு வந்து செல்வோர் எண்ணிக்கையும் அதிகம்.

இங்குள்ள நேரு பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் காய்கறி கண்காட்சி அனைவரையும் கவரக்கூடியது. கோடை விழாவில் இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி நடைபெறும்போது, ஊட்டி மலர்க்கண்காட்சிபோல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இது தவிர கோத்தகிரி மையப்பகுதியில்தான் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், வங்கிகள், தனியார் பள்ளிகள், கார், ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இதனால் இங்கு தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாகவே தினசரி இங்கு போக்குவரத்து நெருக்கடி திணறடிக்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுகிறது.

பள்ளிக்குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் பகுதிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், மினி பஸ்கள் வந்து போவதால் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதி வரை ஏராளமான வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகிறார்கள். இதனால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி ஏற்படுகிறது.

இது குறித்து கோத்தகிரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கோத்தகிரியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் அல்லது தனியார் சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைத்து கோத்தகிரியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotagiri ,Neelgiri District ,
× RELATED 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம்...