*கைவினை கலைஞர் முனுசாமி வழங்கினார்
புதுச்சேரி : புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை பள்ளி மாணவர்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற டெரக்கோட்டா பொம்மைகள் செய்வது எப்படி என்பது குறித்து கைவினை கலைஞர்
பத்மஸ்ரீ முனுசாமி பயிற்சி அளித்தார்.புதுச்சேரியில் புவிசார் குறியீடு பெற்ற டெரக்கோட்டா எனப்படும் சுடு களிமண் சிற்பக்கலை பாரம்பரிய கலையாக உள்ளது.
இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கணுவாப்பேட்டை கிராமத்தில் தனி பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். மும்பையில் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களுக்கு பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்களும், விலங்குகள், பாரம்பரிய கலைப்பொருட்கள், பறவைகள், சாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என பல்வேறு பொம்மைகளை செய்வதை ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், முதல் முறையாக கையில் களிமண் பட்டது.
கை அழுக்கானாலும் பெருமிதமாக இருந்தது. புதிய வகை பொம்மைகளை எங்கள் கைகளால் செய்தது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்போம். என்றனர்.
பின்னர் இதுகுறித்து கைவினை கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி கூறும்போது, அழிவின் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளி மாநில மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை. 9 விதமான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது என்றார்.
