* ஆந்திராவை சேர்ந்த போலி டாக்டர், மகளுடன் கைது
* மேலும் பலரிடம் 50 சவரன் பறித்ததும் அம்பலம்
சென்னை: மாடலிங் வாய்ப்பு பெற்று தருவதாக கல்லூரி மாணவியை ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு அழைத்து சென்று, போட்டோ ஷூட் நடத்தி, 16 சவரன் நகைகளை திருடிய ஆந்திர போலி டாக்டர் மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரை சேர்ந்தவர் ரகுராஜ். இவரது வீட்டில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜெகதீஷ் (52), அவரது 17 வயது மகள் மற்றும் மனைவி கீதா ஆகியோர் வாடகைக்கு கடந்த ஜூன் மாதம் குடிவந்தனர். அப்போது ஜெகதீஷ், தான் ஒரு டாக்டர் என்று ரகுராஜிடம் கூறியுள்ளார்.
அதேநேரம் ரகுராஜ் மகள் புனிதாஸ்ரீ (22) அழகாக இருந்ததால், தந்தை ரகுராஜிடம், உங்கள் மகளுக்கு ஏன் சினிமாவில் வாய்ப்பு தேடக்கூடாது என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். பிறகு ஜெகதீஷ் தனக்கு சினிமா துறையில் பலரை நன்றாக தெரியும் என்று கூறி, சினிமா வாய்ப்புக்கு முன்பு மாடலிங்கில் ஈடுபட வேண்டும். அதற்காக உங்கள் மகளை அழகாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு ஜெகதீஷ் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளேன். இதனால் உங்கள் மகளை என்னுடன் அனுப்பினால் மாடலிங்கிற்கு போட்டோ ஷூட் எடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய ரகுராஜ், தனது மகள் புனிதாஸ்ரீ மற்றும் சகோதரனை கடந்த 16ம் தேதி ஜெகதீஷ், அவரது மனைவி, மகளுடன் சென்னைக்கு போட்டோ ஷூட் எடுக்க அனுப்பி உள்ளார். அப்போது ஜெகதீஷ் திருவண்ணாமலையில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார். பிறகு மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு போட்டோ ஷூட் எடுக்க ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு புனிதாயை அழைத்து சென்று, விதவிதமான ஆடைகளுடன் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்போது புதிய துணியை கொடுத்து இந்த துணியை அணிந்து போட்டோ எடுக்கும் போது நகைகள் அணிந்து இருக்க கூடாது என கூறி புனிதாஸ்ரீயிடம் இருந்த 2 ஆரம், செயின் ஒன்று, மோதிரம், கம்மல் என 16 சவரன் நகைகளை ஜெகதீஷ் வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு புதிய துணியை மாற்ற அங்குள்ள அறைக்கு புனிதாஸ்ரீயை அனுப்பியுள்ளார். உடன் அவரது சகோதரனையும் அருகில் இருந்து அழைத்து வரும்படி கூறி அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் உடையை மாற்றி வெளியே வந்து பார்த்த போது, ஜெகதீஷ் மற்றும் அவரது மகள் மற்றும் மனைவி ஆகியோர் மாயமாகி இருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரகுராஜ் மகள் புனிதாஸ்ரீ மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் வணிக வளாகம் முழுவதும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து புனிதாஸ்ரீ அவரது தந்தை ரகுராஜிடம் கூறியுள்ளார். உடனே அவரது தந்தை கூறியபடி புனிதா அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெகதீஷ், கோவை மாவட்டத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்துடன் ஒவ்வொரு பகுதியாக சென்று, வீட்டின் உரிமையாளர் இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து நூதன முறையில் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.
மேலும், ஜெகதீஷ் மீது சென்னையில் சாஸ்திரி நகர், வேளச்சேரி மற்றும் கோவை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் இதுபோல் நூதன முறையில் 50 சவரன் வரை நகைகள் திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
பல இடங்களில் இன்ஜினியர் மற்றும் டாக்டர் எனக்கூறி நூதன முறையில் தனது குடும்பத்துடன் கைவரிசை காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. திருடிய நகைகளை விற்று, ஜெகதீஷ் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், நாடு முழுவதும் பைக்கில் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் செல்போன் சிக்னல் மற்றும் அவர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, ஜெகதீஷ் கொளத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் ஜெகதீஷ் மற்றும் அவரது 17 வயது மகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரது மனைவி கீதாவை தேடி வருகின்றனர்.
