சென்னை: நில குத்தகையை புதுப்பிக்காமல் தமிழகத்தில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க்-களுக்கான உரிமங்கள் வழங்கும் போதும், உரிமங்களை புதுப்பிக்கும் போதும் அவை அமைந்துள்ள நிலங்களின் உரிமை குறித்து சரி பார்க்கும் வகையில், சுற்றறிக்கைகள் பிறப்பிக்க மத்திய பெட்ரோலிய துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர், பெட்ரோல் பங்குகளுக்கான உரிமங்கள் வழங்கும் போதும், உரிமங்கள் புதுப்பிக்கும் போதும், அவை அமைந்துள்ள நிலத்துக்கான குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். ஆனால், பல பெட்ரோல் பங்குகள், நிலத்தின் குத்தகை காலம் காலாவதியான பிறகும் தொடர்ந்து அதே நிலத்தில் இயங்கி வருகின்றன்.
சட்ட விதிகளின்படி, நிலத்தின் குத்தகை காலம் முடிந்து விட்டால் பெட்ரோல் பங்குகள் உரிமம் ரத்தாகி விடும்.
இதையடுத்து, பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ள நிலத்துக்கான குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அனுப்பிய கடிதம் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் எத்தனை பங்குகள் அமைந்துள்ள நிலங்களின் குத்தகை காலாவதியாகியுள்ளது? எத்தனை பங்குகளின் குத்தகைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்ற பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். குத்தகை புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? குத்தகை முடிந்ததை அடுத்து, நிலத்தை காலி செய்யக் கூறி பெட்ரோல் பங்குகளுக்கு நில உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களா? அல்லது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்களா? போன்ற விவரங்களையும் சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
