×

போலீஸ் தடையில்லா சான்று பெறாத விவகாரம் 72 பெட்ரோல் பங்க் உரிமம்: சிபிஐ விசாரணை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் வைக்க போலீஸ் தரப்பில் இருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். இதை பணம் வாங்கிக்கொண்டு போலியாக தயாரித்து கொடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக பெட்ரோல் பங்குகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. 4 பேர் மீது மட்டும் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.காவல்துறை மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், நேர்மையான முறையில் விசாரணை நடந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரரான வி.பி.ஆர்.மேனன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இந்த மோசடியில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெட்ரோல் பங்க்குகள் அமைக்க போலியாக தடையில்லா சான்று பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை. சென்னையில் மட்டுமே 72க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளதாக மனுதாரர் ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். அதேநேரம் திண்டுக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சரியாக அடையாளம் கண்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதால் அந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரே விசாரணை நடத்தலாம், என்று உத்தரவிட்டனர்.

Tags : CBI ,Madras High Court ,Chennai ,V.P.R. Menon ,Tamil Nadu ,Puducherry… ,
× RELATED 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள்...