×

துரோகத்துக்கு துரோகமே பதில்! போட்டியிடும் தொகுதிகள் ரெடி: சசிகலா அதிரடி

அதிமுகவில் இணைப்பு சாத்தியமில்லாத நிலையில், தான் மட்டும் தனித்து விடப்பட்டதாக எண்ணிய சசிகலா, உடனடியாக ஆதரவாளர்களை சந்தித்து தேர்தல் போட்டி குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவிற்கு எதிராக நேரடியாக வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்துள்ளனர்.  இதன்படி வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் பிரமாண்டமான முறையில் தனது கட்சியின் கூட்டத்தை நடத்துகிறார்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பதோடு, முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் போட்டியிடவுள்ள தொகுதிகளையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தனது கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் தொடங்கி குமரி மாவட்டம் வரையிலும் அதிகளவில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இது தவிர்த்து கொங்கு பகுதிகள் மற்றும் வடமாவட்டங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளில் கண்டிப்பாக தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதிலும் அவர் உறுதியாக உள்ளாராம்.

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டதாக சசிகலா நினைக்கிறார். தனக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்த அதே ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்து விட்டார். இதோடு அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் தான் உயிர்ப்பித்த நிலையில், தன்னை அரசியலை விட்டே வெளியேற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதனால், இந்த தேர்தலில் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக உள்ளார்.

தென்மாவட்டங்களை பொறுத்தவரை சசிகலாவின் முதல் இலக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி தான். எடப்பாடி மீது எந்தளவிற்கு கோபம் உள்ளதோ, அதைவிட சற்று கூடுதலாகவே முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது சசிகலாவிற்கு கோபம் உள்ளது. இதனால், அவரது தேர்வில் முதல் இடமே திருமங்கலம் தொகுதி தான். அதைப்போல மேலூர், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் நிச்சயம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 6 தொகுதிகளில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் களத்தில் இருப்பர். நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, போடி, காரைக்குடி, சிவகங்கை, முதுகுளத்தூர், திருவாடானை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, நெல்லை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருமயம், புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் பட்டியிலில் முன்னுரிமையில் உள்ளது.

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சசிகலா அடையாளம் கண்டுள்ளார். பசும்பொன் கூட்டத்தில் கட்சி அறிவிப்போடு நிற்காமல் போட்டியிடவுள்ள முதல்கட்ட தொகுதிகளின் பட்டியலையும் அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது. சசிகலாவின் இந்த நடவடிக்கை அதிமுகவில் தங்களை பெரிய தலைவர்களாக காட்டிக் கொள்ளும் மாஜி அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எதிராகவே இருக்கும். இதனால், அவர்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்’’ என்றார்.

* புதுக்கட்சியா? திவாகரன் கட்சியா? கடைசி நேர டிவிஸ்ட்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி மகன் மருது(எ) கண்ணன் ஆகிய இருவரும் செய்து வருகின்றனர்.

இதுபற்றி சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், ‘வரும் 24ம் தேதி பொதுக்கூட்டத்தில் சுமார் 50,000 பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயரை இணைத்து புதுக்கட்சியின் பெயர் இருக்கும். இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டால், ஏற்கனவே திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த கட்சியையே சசிகலா தலைமை தாங்கி நடத்தவும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

* 10 நாட்களாக எடப்பாடி, டிடிவி ‘சைலென்ட் மோட்’
‘‘24ம் தேதி பொதுக்கூட்டம் முடிந்த பின், தமிழகம் முழுவதும் சசிகலா பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். துரோகிகளையும், எதிரிகளையும் எதிர்த்து சசிகலாவின் புதிய பயணம் என்ற பெயரில் அந்த பிரசாரம் இருக்கும். எத்தனையோ துரோகிகளை சசிகலா பார்த்து விட்டார். இனி சசிகலாவின் வேறொரு முகத்தை எதிரிகளும், துரோகிகளும் பார்ப்பார்கள். 2026 தேர்தலுக்கு பின் துரோகிகள் சசிகலாவிடம் ஓடி வருவார்கள்.

அந்த காலம் நிச்சயம் வரும். கடந்த 10 நாட்களாக எடப்பாடி பழனிசாமியோ, தினகரனோ சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை. சசிகலாவின் இந்த அதிரடி நடவடிக்கை அவர்கள் இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சசிகலா பிரசார பயணத்தின் போது, நான் என்ன தவறு செய்தேன்.

ஏன் என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார்கள் என்று ஒரு பிரதான கேள்வியை முன் வைக்க போகிறாராம். மேலும் ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவில் எனது பங்களிப்பு இருந்தது. என்னால் பதவிக்கு வந்தவர்கள், பதவி சுகத்துக்காக இன்று துரோகம் செய்து விட்டனர். அதிமுகவையும் அழிவு பாதைக்கு எடுத்து சென்று விட்டனர் என்றும் சசிகலா பிரசாரம் செய்ய உள்ளாராம்’’ என்று ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Sasikala ,AIADMK ,Tamil Nadu… ,
× RELATED எனக்குலாம் அப்போவே கூட்டம்...