×

மார்ச் 1ல் மதுரை, 7ல் வேலூர், 11ல் திருச்சி 10 நாட்களில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 3 முறை விசிட்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் உடனே பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு ‘விசிட்’ அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சியினருக்கு ஆதரவாக பிரதமர் மோடி கடந்த 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், 10 நாட்களில் 3 முறை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளார்.

மார்ச் 1ம் தேதி மதுரையிலும், மார்ச் 6ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இந்த இரு கூட்டங்களிலும் பிரதமருடன் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வேலூர் கூட்டத்தை தொடர்ந்து, மார்ச் 11, 15ம் தேதிகளில் பிரதமர் மோடி திருச்சி அல்லது தஞ்சாவூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி மார்ச்சில் 5 முறை தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். அதாவது, மார்ச் 1ம் தேதி மதுரை, மார்ச் 7 வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். மதுரைக்கு வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கோவை மற்றும் வடக்கு மண்டலத்தில் பொதுக்கூட்டத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 11ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டெல்டாவை சேர்ந்த பாஜவின் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை தஞ்சாவூருக்கு அழைத்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனால் மார்ச் 15ம் தேதி தஞ்சாவூருக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது’’ என்றனர்.

* ஒரே நாளில் 3 மாநிலத்தில் பிரசாரம்
மார்ச் 1ம் தேதி காலை புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேச உள்ளார். தொடர்ந்து, மதுரையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று அங்கு நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்கிறார். ஒரு நாளில் 3 மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

Tags : Modi ,Tamil Nadu ,Madurai ,Vellore ,Trichy ,AIADMK ,BJP ,National Democratic Alliance ,
× RELATED எனக்குலாம் அப்போவே கூட்டம்...