×

62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு” விழாவில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 1,172 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.33.50 கோடி உயரிய ஊக்கத் தொகையும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நிதியுதவிகளையும் வழங்கி, முதற்கட்டமாக ரூ.261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழாவில், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 1,172 விளையாட்டு வீரர்களுக்கு 33.50 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நிதியுதவிகளையும் வழங்கி, சென்னையில் முதற்கட்டமாக 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை இவ்வரசு எடுத்து வருகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்குதல்
சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள், பாராலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள், (மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட) தேசியளவிலான போட்டிகள், ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமென்வெல்த் போட்டிகளின் பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், துணை முதலமைச்சர் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை 23.12.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 5 மாற்றுத்திறனாளி (பாரா) விளையாட்டு வீரர்கள் உட்பட 116 விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் பன்னாட்டு, ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 5,406 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு 177.80 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயரிய மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழ்நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் இதுவரை 241 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 29.67 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் , பன்னாட்டு, ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,172 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 33 கோடியே 51 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார். சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு அடிக்கல் நாட்டுதல் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை (OMR), செம்மஞ்சேரி பகுதியில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் “சர்வதேச விளையாட்டு நகரம்” எனும் பன்முக விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் மொத்தம் 261 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 80 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், சர்வதேச தரம் வாய்ந்த கால்பந்து மைதானம். துப்பாக்கி சுடும் தளங்கள் (10மீ, 25மீ. 50மீ), வில் வித்தை தளம், ரோயிங், கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்ற நீர்விளையாட்டு வசதிகள், BMX சைக்கிள் மற்றும் ஸ்கேட்டிங் மையங்கள். பல்துறை உள்அரங்குகள் (பாட்மிண்டன். மல்யுத்தம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவை), பயிற்சி மையங்கள் மற்றும் வீரர்களுக்கான விடுதிகள் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. OMR பகுதியின் தாழ்வுநில தன்மையை கருத்தில் கொண்டு, நீர்நிலைகள் ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு வடிவமைப்புகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் சென்னை நகரத்தை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்றி, ஒலிம்பிக் நிலை வீரர் பயிற்சியை ஊக்குவிப்பதோடு, விளையாட்டு சுற்றுலா மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) அரசுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும். விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதில் தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு 8.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை சிறப்பாக இயங்க நிதி ஆதாரம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். எனவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும். உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் பல்வேறு செலவினங்களுக்கு இதுவரையில் 4231 விளையாட்டு வீரர். வீராங்கனைகளுக்கு 30 கோடியே 20 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் 15.01.2026 முதல் 06.02.2026 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாடு வீரர்கள் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் ஆர்.எஸ். அம்பிரீஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்க தொகையாக தலா 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களுக்கான 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கால்பந்து மற்றும் ஹாக்கி விளையாட்டு உபகரணங்களை நாமக்கல் கால்பந்து வீராங்கனை மதுமிதா அவர்களிடம் வழங்கினார்.
இந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரந்தாமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம். இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள பாரா பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ஜெகதீஷ் டில்லி, ஜிம்னாசிஸ்டிக் வீராங்கனை சினேகா, கபடி வீரர் மணத்தி கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,CHENNAI ,CHAMPIONS OF TAMIL NADU ,TAMIL NADU CHAMPIONS FOUNDATION ,
× RELATED உச்சி மாநாடு 2026 மூலம் கிடைத்த பெரும்...