×

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக குறைந்தது 3 மாவட்ட விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால்

திருவண்ணாமலை, பிப்.19: சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதால், அணையின் நீர்மட்டம் 114 அடியாக குறைந்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவழையும், வடகிழக்கு பருவமழையும் ஓரளவு கைகொடுத்தது. அதனால், அணைகள், ஏரிகள், கிணறுகள் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, மாவட்டம் முழுவதும் விவசாய சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 119 அடி நிரம்பியதால், கடந்த மாதம் 31ம் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் மே 11ம் தேதி வரை தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 46 கிராமங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 58 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 கிராமங்கள் உள்பட மொத்தம் 119 கிராமங்களில், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதோடு, திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது. அதையொட்டி, சாத்தனூர் அணையின் வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 220 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 330 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி, அணையில் இருந்து கடந்த 20 நாட்களில் மட்டும் 839 மில்லியன் கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. அதனால், அணையின் மொத்த நீர்மட்டம் உயரமான 119 அடியில் இருந்து தற்போது 114.40 அடியாக குறைந்துள்ளது. மேலும், அணையின் நீர் இருப்பு தற்போது 6347 மில்லியன் கடி அடியாக உள்ளது. இது, 70 சதவீத நீர் இருப்பாகும். இந்நிலையில், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடைபெறுவதற்காக தென் பெண்ணை வழியாக விரைவில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Sathanur dam ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED கிளியை பிடித்து 5 சிறுவர்கள் ரீல்ஸ்...