×

சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு, பிப். 16: விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் திரண்டு பொழுதை கழித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள சாத்தனூர் அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆதாம் ஏவாள் பூங்கா, அறிவியல் பார்க், தொங்கு பாலம், மயில் கூண்டு, முயல் கூண்டு, டைனோசர் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில், விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயத்திற்கு வலது புறம் இடதுபுறம் வழியாக வினாடிக்கு 550 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணை 115.25 அடியாக நீர் மட்டும் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sathanur Dam ,Thandarampattu ,Tiruvannamalai district ,
× RELATED இளம்பெண் திடீர் மாயம் உறவினர் வீட்டில் தங்கியிருந்த