திருவண்ணாமலை, பிப். 16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், மகா சிவராத்திரி தனிச்சிறப்பு மிக்கது. மகா சிவராத்திரி உருவான திருத்தலம் எனும் பெருமைக்குரியது அண்ணாமலையார் திருக்கோயில். படைத்தல் கடவுளான பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளான திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட தங்களில் யார் பெரியவர் எனும் எண்ணம் தோன்றியபோது, ‘நான்’ எனும் அகந்தையை அழித்து, ‘லிங்கோத்பவ மூர்த்தி’யாக சிவபெருமான் எழுந்தருளிய திருநாளே மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைத் திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை லட்சார்ச்சனை நடைபெற்றது.
துளசி, வில்வம் மற்றும் எண்ணற்ற மலர்களை கொண்டு சுவாமிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பகல் 12.05 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இரவு முழுவதும் விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது. மேலும், இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றது. மேலும், நள்ளிரவு 12 மணிக்கு லிக்கோத்வர் சிறப்பு வழிபாடு நடந்தது.
முதல்கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம்கால பூஜையை திருமாலும், மூன்றாம்கால பூஜையை உமையாளும், நான்காம்கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவது இத்திருக்கோயிலின் மரபாகும். விடிய, விடிய நான்கு கால பூஜைகள் நடந்ததால், இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், ஆந்திரா, தலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. அதேபோல், வெளி நாட்டு பக்தர்கள் வருகையும் அதிகமாக காணப்பட்டது.
இதுவரை எப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். அதனால், சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
