×

யார் ஆட்சியில் வளர்ச்சி….. எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மோதல்

 

சென்னை: யார் ஆட்சியில் வளர்ச்சி என்பது தொடர்பாக பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினருடன் அமைச்சர்கள் காரசார விவாதம் நடத்தினர். தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பேசுகையில், ‘கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டோர் பெற்ற கடன் ரூ.5 லட்சம் கோடி. ஆனால் கடந்த 5 ஆண்டில் ரூ.5.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குகிறது என குறிப்பிட்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: உத்தரபிரதேசத்திற்கு ஒன்றிய அரசு அதிக நிதி கொடுக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது, அதனால் தான் செயற்கையாக தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கிறது.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தற்போது எங்கு பார்த்தாலும் பத்திரிகைகளில் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி என்கின்றனர். ஆனால் முதன்மை துறையான விவசாயத்தின் வளர்ச்சி, -1.83. மைனஸ் 65 சதவீத மக்கள் தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட முதன்மை துறையில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் முதன்மை தொழில்களின் வளர்ச்சி 5 சதவீதத்திற்கு மேல் இருந்தது உங்கள் ஆட்சியில் மட்டும் இந்த வளர்ச்சி வளர்ந்து விடவில்லை எங்களது ஆட்சியின் தொடர்ச்சியாக தான் வளர்ச்சி வந்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு:ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்தே பேசுகிறோம், உற்பத்தி துறை அதிகம் பங்களிக்கிறது, சேவைத்துறையும் கை கொடுத்துள்ளது. மொத்த வளர்ச்சியைதான் பேச வேண்டும், தனித்தனி துறைகளின் வளர்ச்சி அல்ல, வேளாண் துறை வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய தொழில்துறை வளர்ச்சிக்கு உங்கள் ஆட்சி காரணம் என்றால், வேளாண்துறை வீழ்ச்சிக்கு காரணம் என்ன..? உங்கள் ஆட்சியில் விவசாயத்துறை வளர்ச்சி அடையாததே இப்போது விவசாய துறை வீழ்ச்சி அடைய காரணம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் திமுக போல விளம்பரம் கொடுத்து கொண்டது இல்லை. ஆனால் தினம்தோறும் பத்திரிகையில் நீங்கள் விளம்பரம் கொடுக்கிறீர்கள்.

அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி: வாதத்தை திசை திருப்புகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு, உ.பி போல எங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று கூறி தனது இயலாமையை எடுத்து காட்டியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: இயலாமை அல்ல.. அது நெருக்கடி. நாங்கள் ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுதான் இரட்டை பொருளாதார வளர்ச்சி என்ற இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.

எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: விவசாயத்துறையில் 65% மக்கள் அதிகம் பயன் பெருகின்றனர். முதன்மை துறையில் 3% ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியை வைத்து பேசக்கூடாது. நாங்கள் சாதனையை மக்களிடம் சொன்னோம், விளம்பரம் செய்யவில்லை, ஓராண்டு உற்பத்தி அதிகமானதால் மட்டுமே விளம்பரம் செய்கின்றனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: திமுக அரசு உண்மையை உரக்க சொல்கிறோம் – நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும். ஒன்றிய அரசு கொடுக்கும் நெருக்கடி நீங்கள் கொடுக்கும் நெருக்கடிகளை அரசு சமாளித்துக்கொண்டு அரசு நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலு: ஒரு பக்கம் வறுமையை ஒழித்து உள்ளோம். ஒரு பக்கம் ஜிடிபியை உயர்த்தி உள்ளோம். இதன் காரணமாக பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்: தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தியும் அதிகரித்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் போராட்டம், போராட்டம் என்று தான் இருந்தனர். இந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சி காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி – 29 சதவீதமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்திலும் வேளாண் துறை வளர்ச்சி குறைந்துள்ளது.

அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி: கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரியை கூட உங்களால் கொண்டு வர முடியவில்லை. எதிர்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்த போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்ந்த கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு உருவாக்கி கொடுத்தவர் எதிர்ட்கட்சி தலைவர். அதிமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதமாக இருந்தது கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு தற்போது மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எழ்மை நிலையில் இருக்கும் மாணவர்கள் படித்து உயர வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அது. அவர் சைக்கிள் மூலம் பலவற்றை வாங்கும் போது அவர்களுக்கு ஓட்டு போதும் வயது இல்லை.

அமைச்சர் தங்கம் தென்னரசு: உறுப்பினர் கே.பி.முனுசாமி கூறிய கருத்தில் மாறுபட்ட கருத்து இல்லை. மடிக்கணினி கொடுப்பது வாக்கை மனதில் வைத்து கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதை கட்டமைக்க பார்க்கிறீர்கள். காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் நமது முதல்வர். அவர்களுக்கு வாக்குரிமை உள்ளதா. இன்னும பத்து ஆண்டுகளில் அவர்களுக்கு வாக்குறுமை கிடைக்குமா. வாக்கை குறித்து மடிக்கணினி திட்டம் செயல்படுத்தபடுகிறது என்று கூறுவது சரியில்லை.

அமைச்சர் மா சுப்பிரமணியன்: மாவட்டத்தில் ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை முதல் முறையான முன் மொழிந்தவர் கலைஞர். நீங்கள் தொடங்கி வைத்த கல்லூரியை திறந்து வைத்தது நாங்கள். தேதி வாரியாக அதை பல முறை கூறி உள்ளோம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தது தற்போது உள்ள முதல்வர். அந்த மசோதா ஆளுநர் அனுப்பி வைத்து தூங்கி கொண்டு இருந்தது. இதற்காக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியவர் நமது முதல்வர். ஆளுநர் மாளிகை 3 மாதம் இதை கிடப்பில் போட்டது. அதற்கு அதிமுக நடவடிக்கை எடுத்ததா? என அமைச்சர் பேசும் போது அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது அதிமுகவினர் அமைச்சரை பேச விடாமல் குரல் கொடுத்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மருத்துவ துறை அமைச்சர் பேசும் போது தவறான தகவல்களை தருகிறார். எனக்கூறி அவர் குறித்து ஒரு வார்த்தையை எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்கு திமுக சார்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

சபாநாயகர் அப்பாவு: அதிமுக உறுப்பினர்கள் உட்கார்ந்து கொண்டே பேசக்கூடாது உங்கள் தலைவர் பேசும்போது நீங்கள் குரல் கொடுப்பது நன்றாக இல்லை. அமைச்சர்கள் பேசும்போது அதைக் கேளுங்கள். அதில் தவறு இருந்தால் பதில் பேசுங்கள் அதற்கு நான் நேரம் தருகிறேன் எனக் கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் தங்களது இருக்கை விட்டு எழுந்து வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் வந்து ஏதோ கூற முயற்சி செய்தனர். அவர்களை அப்பாவு எச்சரித்து உங்கள் இருக்கைக்கு உடனே செல்லுங்கள் எனக் கூறினார்.

அப்போது தளவாய் சுந்தரத்திற்கும் சபாநாயகருக்கும் இடையில் நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டது. உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் கூறிய போது எடுத்து பாருங்கள் என தளவாய் சுந்தரம் சவால் விட்டார். அதன் மேல் எடப்பாடி பழனிசாமி அவர்களை செல்லுமாறு கூறினார். அதேபோல் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனையும், சபாநாயகர் அப்பா எச்சரித்தார். அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் உட்கார்ந்து கொண்டே கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.

அமைச்சர் கோவி செழியன்:தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் 42 புதிய கலைக் கல்லூரிகள் வேளாண் கல்லூரிகள் சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்கள் ஆட்சியில் ஏதாவது கொண்டு வந்தீர்களா? தாய் தகப்பனை கொரானா காலத்தில் இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் தருவது யார்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஒரு ஆட்சி கொண்டு வந்த திட்டத்தை அடுத்த ஆட்சி செய்வது இயற்கை தான் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். நாங்கள் கொண்டு வந்தோம் என்ற காரணத்திற்காக மதுரவாயில் திட்டத்தை நிறுத்தினார்கள் ஓமந்தூரார் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள், ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. நீங்கள் கொண்டுவந்த கல்லூரியில் நாங்கள் கட்டி இப்போதுதான் 11 கல்லூரிகளிலும் செயல்பட தொடங்கியுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு: மடிக்கணினிகள் வழங்குவது வாக்குக்காக என்ற துணியில் உறுப்பினர் பேசுகிறார். இப்படி பேசக்கூடாது இது அந்த மாணவர்களின் மனது புண்பட்டு விடும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்த போதும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவு உறுப்பினர் எழவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : EDAPPADI PALANICHAMI ,Chennai ,Atamugavinar ,Berawa ,Former ,Minister ,K. B. Munusamy ,
× RELATED கூட்டணி குறித்து கவலை வேண்டாம்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு