×

2014ம் ஆண்டு அசாம் முதல்வராக பதவியேற்பதை ராகுல் தடுத்தார்: மனம் திறந்த ஹிமந்த பிஸ்வா சர்மா

கவுஹாத்தி: கடந்த 2014ம் ஆண்டு முதல்வராகும் வாய்ப்பை ராகுல் காந்தி பறித்துவிட்டதாக தற்போதைய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின் அசாம் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி நிலவியது. எம்எல்ஏக்களில் ஒரு பகுதியினர் ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராவதற்கு ஆதரவு தெரிவித்தனர். எனினும் அவ்வாறு நிகழவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் ஹிமந்த பிஸ்வா சர்மா காங்கிரஸ் கட்சியில் இருந்து 2015ம் ஆண்டு விலகி பாஜவில் இணைந்தார்.

சட்டமன்ற தேர்தலில் பாஜவின் முதல் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் 2021ம் ஆண்டு பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்தபோது முதல்வரானார். இந்நிலையில் அசாம் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய முதல்வர் சர்மா,” கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தருண் கோகாய்க்கு பதிலாக பதவியேற்க எனக்கு 58 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி என்னை அசாம் முதல்வராக பதவியேற்பதற்கான தேதியை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நான் காமாக்யா கோயிலில் நடந்த அம்புபாச்சி மேளாவுக்கு பின் முதல்வராக பதவியேற்பதாக கூறினேன். ஆனால் அமெரிக்காவில் இருந்து ராகுல்காந்தி கட்சி தலைவர்களுக்கு தொலைபேசியில் பேசிய பின்பு நிலைமை மாறிவிட்டது. அப்போது நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

ஆனால் இப்போது ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நல்லதுக்குத்தான் என்று நம்புகிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தால் எனக்கு கிடைத்திருக்கக்கூடியதை விட கடவுள் இப்போது அதிகமாக கொடுத்துள்ளார். பாஜ முதல்வராக அசாம் மற்றும் சனாதன தர்மம் இரண்டிற்கும் முழு மனதுடன் சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. நான் எப்போதாவது புத்தகம் எழுதினால் இன்னும் அதிக விரிவாக கூறுகிறேன்” என்றார் .

Tags : Rahul ,Assam ,Himanda Biswa Sharma ,KAUHATHI ,RAHUL GANDHI ,2011 assembly elections ,Assam Congress party ,Himanda Piswa ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...