×

யுபிபிஎல், பிபிஎப் கட்சிகளுக்கு ஆப்பு; அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’ வைத்ததால் திருப்பம்

கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

தற்போது அங்கு பாஜக கூட்டணியில் யுபிபிஎல் மற்றும் பிபிஎப் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இருப்பினும், தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. போடோலாந்து பகுதியில் உள்ள 15 தொகுதிகளில் தங்களுக்கு குறைந்தது 7 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று யுபிபிஎல் கட்சி வலியுறுத்தி வருவது கூட்டணியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘போடோலாந்து பிராந்தியத்தில் உள்ள தங்லா, கோரேஸ்வர் மற்றும் தமுல்பூர் உள்ளிட்ட 4 முதல் 6 தொகுதிகளில் பாஜக தனித்து வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார். கூட்டணியில் உள்ள பிபிஎப் கட்சி 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட சிக்னல் கொடுத்திருந்த நிலையில், பாஜகவும் தனது பலத்தை நிரூபிக்க களம் இறங்கியுள்ளது. ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். இந்த அதிரடி முடிவால் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.

Tags : UPPL ,PPF ,BJP ,Assam ,Guwahati ,Chief Minister ,Bodoland ,Assam Assembly ,
× RELATED ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால்...