வருசநாடு, பிப். 5: வருசநாடு அருகே, மர்மநோய் தாக்கி 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ள நிலையில், கால்நடை மருத்துவமனையை ஆடு வளர்ப்போர் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் ஆடு, மாடு வளர்ப்புத்தொழில் அதிகமாக உள்ளது. இங்குள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால், கால்நடைகளுக்கு நோய் தாக்கினால் தனியார் மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோம்பைத்தொழு கிராமத்தில் ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்கி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் கால்களில் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஆடுகள் நடக்க முடியாமல் உணவு உண்ணாமல் இறந்து விடுகிறது. தற்போது வரை இந்த நோய் தாக்கி கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த தவமணிக்கு சொந்தமான 28 ஆடுகள், ஜெகனுக்கு சொந்தமான 20 ஆடுகள், குருசாமி என்பவரது 18 ஆடுகள் என மொத்தம் 100க்கும் அதிகமான ஆடுகள் இறந்துப் போனதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று டாக்டர் வராததை கண்டித்து பொதுமக்கள் நோய் தாக்கிய ஆடுகளுடன் கோம்பைத்தொழு கால்நடை மருத்துவமனையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மயிலாடும்பாறை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், ‘கோம்பைத்தொழு கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது நோய் தாக்கி ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கோம்பைத்தொழு கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் நாள்தோறும் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக விவசாயி செல்வகுமார் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் 7 கால்நடை மருத்துவமனை உள்ளது. இதில், 2 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் கால்நடை வளர்ப்பு முதன்மை தொழிலாக உள்ளது. எனவே அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் புதிய டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும். மேலும் தற்போது கோம்பைத்தொழு கிராமத்தில் பரவி வரும் மர்ம நோயை தடுக்க சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்’ என தெரிவித்தார்.இது தொடர்பாக மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குனர் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் புதிய டாக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது கோம்பைத்தொழு கிராமத்தில் பரவி வரும் மர்ம நோயை கட்டுப்படுத்த கால்நடை துறை சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்படும். மேலும் நோய் தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.