×

என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்எம்பி மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடியில் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.

மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

என்எம்பி மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக் கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் மதிப்பு கொண்ட IGBTகள், (Insulated-gate bipolar transistor) ICகள் (Integrated Circuits) போன்றவற்றிற்கான முழுமையான உற்பத்தி அமைப்பை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையம் அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக, உயர் திறன் மிக்க பணியாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஏக்வஸ் (Aequs) குழுமம், 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7,000 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்-சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தித் தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உப பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இத்தொழிற்பூங்காவில் விமான இயந்திர உப பாகங்கள் மற்றும் துல்லிய பொறியியல் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5980 கோடி ரூபாய் முதலீட்டில் 8400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : NMB Minibia ,Aqus Group ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Department of Industry, Investment Promotion and Commerce ,Chennai Secretariat ,NMB Minibia India Private Limited ,Japan ,Minibia Mitsumi ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு பள்ளி...