மல்லூர், பிப்.16: சேலம் பனமரத்துப்பட்டி ஏரிக்குள் விவசாயம் செய்ய மீண்டும் நிலத்தை வழங்கக் கோரி, அங்கு குடிசை அமைக்க முயன்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்துள்ள பனமரத்துப்பட்டி ஏரியில், கடந்த 20 ஆண்டுக்கு முன் ஒரு பகுதியில் அரளி உள்ளிட்ட பூச்செடிகளை பயிரிட்டு, சிலர் விவசாயம் செய்து வந்தனர். அந்த ஏரி சேலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதால், அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரியை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் மகா சபா சார்பில், பனமரத்துப்பட்டி ஏரியில் ஏற்கனவே விவசாயம் செய்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட தலைவர் அன்பு, ஒன்றிய நிர்வாகி கண்ணன் உள்ளிட்ட 80 பேர், ஏரிக்குள் சென்று குடிசை அமைக்க முயற்சி செய்தனர்.
அப்போது, பனமரத்துப்பட்டி இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அவர்களை தடுத்து, இது அத்துமீறிய செயல், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீண்டும் ஆக்கிரமிக்கக்கூடாது என எடுத்துரைத்தனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கு குடிசை போட முயன்றனர்.
உடனே நிர்வாகிகள் அன்பு, கண்ணன் மற்றும் 26 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்து, பனமரத்துப்பட்டியில் உள்ள சமுதாய கூடத்திற்கு கொண்டு வந்து அடைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி உதவி பொறியாளர் இமயவரம்பன், பனமரத்துப்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
