சேலம், பிப். 16: சேலத்தில் அடுத்தடுத்து நர்சிங் மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அடுத்த காரிப்பட்டி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ராஜராஜேஸ்வரி (22). இவர் சேலம் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர், அதன்பின்னர் இரவு வரை வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். இதேபோல், சேலம் அன்னதானப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராகுல். அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரும் முபிதா (24) என்பவரும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சமீபகாலமாக முபிதா அடிக்கடி வெகுநேரம் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் ராகுல் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம், இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்து. தொடர்ந்து ராகுல் கடைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முபிதாவை காணவில்லை. இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முபிதாவை தேடி வருகின்றனர்.
