- இந்தியா
- AI உச்சி மாநாடு
- ஐ.நா.
- AI தாக்க உச்சி மாநாடு
- இந்தியா-AI தாக்க உச்சி மாநாடு
- பாரத மண்டபம்
- தில்லி
ஐநா: “உலகில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்த பொருத்தமான இடம்” என ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா – செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. 70,000 சதுர மீட்டருக்கும் அதிகமான இடத்தில் 10 அரங்குகளில் நடத்தப்படவுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாள்கள் நடைபெறும் மாநாட் டின் 500 அமர்வுகளில் 3,250க்கும் மேற்பட்டோர் உரையாற்ற உள்ளனர்.
உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறவுள்ள முதல் இந்தியா – ஏஐ தாக்கம் உச்சி மாநாடு என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுல டா சில்வா, ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள், ஏஐ கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இந்தியா புறப்பட்ட ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை நான் மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம். உலக பொருளாதாரத்தில் மட்டுமின்றி, உலகளாவிய விவகாரங்களில் அதன் செல்வாக்கிலும் பெரிய பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளது. உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம். ஏஐ-யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம்.
இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். மேலும், இந்த பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியுடன் விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவேன்” என்று அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
