×

இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விருப்பம்; பரஸ்பர நன்மைக்காக இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் தகவல்

டாக்கா: இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க விருப்பம் தெரிவித்துள்ள வங்கதேசம், பரஸ்பர நன்மைகளுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 12ம் தேதி பொதுதேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு மட்டும் நடந்த வாக்குப்பதிவில், மறைந்த முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) 209 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க விரும்புவதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹூமாயுன் கபீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். இப்போது வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும், அவரது அவாமி லீக் கட்சியும் இல்லை. மக்கள் பிஎன்பி கட்சிக்கு தௌிவான ஆதரவை தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட காரணமானவர் ஷேக் ஹசீனா. வங்கசேத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதமாக ஷேக் ஹசீனாவோ, அவரது கட்சியினரோ தங்கள் மண்ணை(இந்திய) பயன்படுத்தாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா உடந்தையாக இருக்க கூடாது. இருநாடுகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டவுடன், வழக்கமான ராஜதந்திர ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கலாம். நாம் அண்டை நாடுகள். இருவரும் பரஸ்பர நன்மைகளுக்காக ஒன்றாக செயல்பட வேண்டும்” என இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் தாரிக் ரஹ்மான், “வங்கதேச வௌியுறவு கொள்கையில் நாங்கள் தெளிவான கண்ணோட்டத்தை கொண்டுள்ளோம். வங்கதேசத்துக்கும், மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அந்த நலன்களை பாதுகாப்பதன் மூலமாகவே வௌியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை பதவியேற்பு விழா; இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு
வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நாளை காலை பதவியேற்பார்கள். அவர்களுக்கு நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் நசீர் உதீன் பதவி பிரமாணம் செய்து வைப்பார். மாலையில் பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. அமைச்சர்களுக்கு அதிபர் முகமது ஷகாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

17ம் தேதி(நாளை) நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்கும் பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பிஎன்பி கட்சி தெரிவித்துள்ளது. வங்க தேச பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என்றும் அவருடன் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் டாக்கா செல்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Bangladesh ,India ,PM ,Tariq Rahman ,Dhaka ,
× RELATED வங்கதேச புதிய பிரதமர் நாளை மறுநாள்...