×

வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பது எப்போது? இடைக்கால அரசு அதிகாரத்தை ஒப்படைக்க ஏற்பாடுகள் தயார்

டாக்கா: வங்கதேசத்தில் பிப்ரவரி 12 அன்று நடந்த பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது, தேர்தல் நடைபெற்ற 299 இடங்களில் அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணி 212 இடங்களைப் பிடித்தது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்த பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் விரைவில் தாரிக் ரஹ்மானிடம் அதிகாரத்தை ஒப்படைக்க விரும்புகிறது. புதிய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்றும் செயல்முறையை தொடங்குமாறு யூனுஸ் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

எனவே புதிய அமைச்சரவை பதவியேற்புக்கான குறிப்பிட்ட தேதியை வழங்க அமைச்சரவை செயலாளர் ஷேக் அப்துர் ரஷீத் ஆலோசனை நடத்தி உள்ளார். இதில் புதிய அரசாங்கம் நாளை அல்லது செவ்வாய்க்கிழமை பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு பிப்.17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதே நாளில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கலாம் என்று முகமது யூனுஸின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை வங்கதேச நாடாளுமன்ற செயலாளர் கனிஸ் மவுலா உறுதிப்படுத்தினார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 297 எம்.பி.க்கள் பிப்ரவரி 17 ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல் அமைச்சரவை செயலாளர் டாக்டர் ஷேக் அப்துர் ரஷீத் கூறுகையில்,’ புதிய அமைச்சரவையின் பதவியேற்பு மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் நடக்கலாம். புதிய எம்.பி.க்களுக்கு புதிய சபாநாயகர் அல்லது தலைமை நீதிபதி அல்லது தலைமைத் தேர்தல் ஆணையரும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய பிரதமருக்கு முதலில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்’ என்றார்.

* மத தாக்குல் நடத்தினால் சட்டத்தின்படி நடவடிக்கை: தாரிக் ரஹ்மான் உறுதி
வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நேற்று முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த தாரிக் ரஹ்மான் கூறியதாவது: புதிய நிர்வாகத்தின் அணுகுமுறையில் சட்டத்தின் ஆட்சி மையமாக இருக்கும். இந்த வெற்றி வங்காளதேசத்திற்கு சொந்தமானது. இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு சொந்தமானது. இந்த வெற்றி ஜனநாயகத்திற்காக பாடுபடும் மற்றும் தியாகம் செய்த மக்களுக்கு சொந்தமானது. இன்று முதல், சுதந்திரம் மற்றும் உரிமைகளின் உண்மையான சாரத்தை மீட்டெடுத்து, நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். நமது பாதைகளும் கருத்துக்களும் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாட்டின் நலனுக்காக, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த வெற்றி தருணத்தில் கலிதா ஜியா இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

நாட்டின் உரிமை மற்றும் அரசியலில் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட இதுபோன்ற ஒரு ஜனநாயக தருணத்தை எதிர்பார்த்து, அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாள் வரை பாசிசத்திற்கு எதிராக உறுதியாகப் போராடினார். நாடு முழுவதும் உள்ள பிஎன்பி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை அல்லது அமைதியின்மையைத் தவிர்க்க வேண்டும். எந்தத் தவறும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது. அரசியல் அல்லது மத அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், பலவீனமானவர்களுக்கு எதிரான வலிமையானவர்களின் தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது. சட்டத்தின் ஆட்சி நிறுவப்படாவிட்டால், எங்கள் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

* டாக்காவில் வென்ற இந்து வேட்பாளர்
டாக்கா 3 தொகுதியில் பிஎன்பி கட்​சி மூத்த தலை​வரும், இந்து மதத்​தைச் சேர்ந்​தவரு​மான காயேஷ்வர் சந்​திர ராய் மொத்​தம் 99,163 வாக்​கு​கள் பெற்று வென்றார்.

Tags : Bangladesh ,Tariq Rahman ,Dhaka ,Bangladesh Nationalist Party ,Prime Minister… ,
× RELATED அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்...