அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி பலமாக ஒன்றிணைந்து இருக்கிறது. மேலும் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து, ஓபிஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலிதா வழி வந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். வெளியில் இருப்பவர்கள் தங்களுக்கு என்ன பலன் என்பதை பாராமல், இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கி விடுவார்கள். தமிழ்நாடு மக்களும் புறந்தள்ளி விடுவார்கள். இவ்வாறு கூறினார். அப்போது செய்தியாளர்கள், ‘‘உங்களுக்குள் பங்காளி சண்டையா’’ என கேட்டதற்கு, ‘‘தவறாக சொல்லாதீர்கள்’’ என்றார்.
* பங்கு கேட்டு கண்டிஷன் போடல…
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘கூட்டணி ஆட்சி என நான் வைத்த குண்டு மற்ற கட்சிகளில் வெடிக்கிறது என விஜய் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் சுமூகமான முறையில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு கவுரவமாக வழங்கப்படும். நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கண்டிசன் போடவில்லை. எங்களை சேர்ந்தவர்கள் அமைச்சராக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என சொன்னேன். ஆசை என்று சொன்னனே தவிர நோ கண்டிஷன். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்றார்.
