×

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. ஈரோடு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப்பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நாளை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை நேற்று பெய்துள்ளது.

இன்று முதல் 17ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். அத்துடன் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று பனி மூட்டம் காணப்படும். இந்தியப்பெருங்கடலின் கிழக்குப் பகுதகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Bay of Bengal ,Chennai ,Tamil Nadu ,Thanjavur ,Tirunelveli ,Ramanathapuram ,
× RELATED திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி...