×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

மாமல்லபுரம், பிப்.14: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அப்படி வருபவர்கள் கடற்கரை கோயிலை சுற்றி பார்க்க அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கடற்கரை கோயிலின் ஒரு பகுதியில் தொல்லியல் துறையினர் சவுக்கு கன்றுகள் நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். தற்போது, அந்த கன்றுகள் பெரிய மரங்களாக வளர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு நிழல் தருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு சவுக்கு மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது, தீ மளமளவென பரவி அருகில் உள்ள மரங்கள் கொழுந்துவிட்டு ஏரிய தொடங்கியது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த இரவு காவலாளி மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் மற்றும் 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால், மற்ற மரங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. கடற்கரை கோயில் வளாகத்தில் உள்ள சவுக்கு மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், கடற்கரை பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என பல்வேறு கோணங்களில் தொல்லியல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Mamallapuram beach temple ,Mamallapuram ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில்...