மாமல்லபுரம், பிப்.13: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை, சாலையில் கிழிந்து தொங்கும் ராட்சத பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை வழியாக அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஓட்டல், ரிசார்ட் நிர்வாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பிளாட் விற்பனை நிர்வாகங்கள் சார்பில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அது காற்றில் கிழிந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சில பேனர்கள் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். கடந்த, 2019ம் ஆண்டு சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேனர் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் ஐகோர்ட் தடை விதித்தது. இதனால், பேனர்கள் வைப்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சூளேரிக்காட்டில் சுமார் 60 அடி உயரம் கொண்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டது.
அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தற்போது காற்றில் பறக்கிறது. மேலும், மாமல்லபுரம் பழைய கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயில், புதிதாக அமைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழிந்து காணாமல் போய் விட்டன. இருப்பினும், அதன் இரும்பு தூண் மற்றும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து முழுமையாக வலுவிழந்து ஆபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் அந்தரத்தில் நிற்கிறது. லேசான காற்று அடித்தால் கூட வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விழும் அபாயநிலை உள்ளன.
மேலும், தனியார் மூலமாகவே ராட்சத பேனர்கள் வைத்து விட்டார்கள் என சில அரசியல் கட்சியினர், அதனை தங்களுக்கு சாதகமாக்கி அரசியல் சம்பந்தமான பேனர்கள் ஒட்டுகின்றனர். சிலர் சுய விளம்பரத்திற்காக பொதுமக்கள் நடமாடக்கூடிய இடங்களிலும், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களிலும் இடையூறாக மாமல்லபுரம் டவுன் முழுவதும் பல இடங்களில் சிறிய அளவிலான பேனர்களை வைத்துள்ளனர். இதில், குறிப்பாக மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி 100 அடி நீளம் கொண்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு ராட்சத பேனர்கள் மற்றும் ராட்சத இரும்பு தூண்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
