புதுக்கோட்டை, பிப்.13: மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த பொது வேலைநிறுத்த அழைப்பின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் முடங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நேற்று நாடுதழுவிய அளவில் பொது வேலைநிறுத்தப் பேராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனம், அரசுப் போக்குவரத்துக்கழகம், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
மேற்படி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இழந்து வேலை நிறுத்தம் செய்ததோடு சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால், பொதுப் போக்குவரத்து, வங்கி மற்றும் சேவைத்துறைகள் முடக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
