பணகுடி, பிப்.13: பணகுடி அருகே பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாத சுவாமி கோயிலில் ரூ.50 லட்சத்தில் புதிய தேர் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாத சுவாமி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு புதிதாக திருத்தேர் உருவாக்கி தர வேண்டும் என பழவூர் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கோரிக்கை வழங்கப்பட்டது. இதை ஏற்று சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் வலியுறுத்தி அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை ஏற்று, தமிழகத்தில் 68 கோவிலுக்கு புதிதாக திருத்தேர் உருவாக்குவதற்கு அனுமதி பெற்று தந்ததோடு, சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது புதிதாக 68 கோவிலுக்கும் புதிதாக திருத்தேர் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயிலுக்கு புதிதாக திருத்தேர் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த சபாநாயகர் அப்பாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் உருவாக்கும் திருப்பணியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் மாரியப்பன், ஹரிஷ்குமார் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் கோசிஜின் பால், அறங்காவலர் குழு தலைவர்கள் இசக்கியப்பன், அசோக்குமார், திமுக நகர செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், இளைஞர் அணி வைகுண்டராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுடலைமணி, ஐயப்பன், திருநாவுக்கரசு, மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
