×

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

திருவள்ளூர், பிப்.13: திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தாட்கோ மூலம் தங்கி படிக்கும் வசதியுடன் உலக தர உணவு சேவை, சூழலியல் சுற்றுலா திறன் உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும், யார்யொரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப பயிற்சி, ஆடைவடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணைய தளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் ஆகும். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Adi Dravidar ,Thiruvallur ,TADCO ,
× RELATED பெரியபாளையம் அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்