×

காங்கிரஸ் எங்களுடன் தான் இருக்கும் ஆட்சியில் பங்கு கிடையாது: கூட்டணியை பிரிக்க சிலர் சதி; முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இரு கட்சிகளும் இணைந்துதான் தேர்தலை சந்திக்கும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று இந்தியா டுடே-வும், சி-வோட்டர்ஸ் நிறுவனமும் நடத்திய சர்வேயில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அந்த சர்வே படி, திமுக கூட்டணி 45 சதவீதம் ஆதரவோடு லீடிங்கில் இருக்கிறது. எங்களுக்கும், 2வது இடத்தில் இருக்கக்கூடிய வித்தியாசத்தை பார்த்தீர்கள் என்றால், 12 சதவீதம். 3 சதவீதம் வித்தியாசம் இருந்தாலே Clean Sweep தான்.

12 சதவீதம் என்றால், அது நிச்சயம் Thumping Victory தான். அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். இந்த சர்வே ரிசல்ட், எங்களுக்கான பூஸ்ட், அவ்வளவுதான். ஏனென்றால், திமுக என்பது எப்போதும், என்றென்றும், மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம். மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம். அதனால், இன்னும் உற்சாகமாக உழைத்து, உங்களுடைய கணிப்பை உண்மையாக்குவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது என்று இங்கே இருக்கின்ற எல்லோருக்கும் தெரியும்.

அதேசமயம், இப்போது திராவிட மாடல் அரசு அமைந்து இந்த 5 ஆண்டுகளில் வரலாறு காணாத வெற்றிப் பாதையில் தமிழ்நாடு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் வென்று, இந்த வளர்ச்சி பயணத்தை வெற்றிப் பயணத்தை திராவிட மாடல் 2.0-விலும் தொடர்வோம். ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களான உங்கள் முன்பு சில புள்ளிவிவரங்களை நான் முன்வைக்கிறேன். கடந்த வருடம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு என்றால், 11.19 சதவீதம். இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை, கடைசியாக எப்போது செய்தோம் தெரியுமா. 14 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவும் திமுக ஆட்சியில்தான். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதிலும், திமுக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனமாக இருக்கும் ஒன்றிய அரசாலேயே, இந்த வளர்ச்சியை மறைக்க முடியவில்லை; மறுக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் GSDP எவ்வளவு?. 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. Per-capita Income, 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய். Per-capita Income, கூட ஒப்பீடு செய்தால், இது, 1.74 மடங்கு அதிகம். அடுத்து, இந்தியா முழுவதும் 50 சதவீதம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 98.3 சதவீதம் பள்ளிகளில் ஆய்வகம் இருக்கிறது. N.I.R.F. தரவரிசையில், தலைசிறந்த நூறு கல்லூரிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 33. டாப் 50, மாநில பல்கலைகளில் 10 பல்கலை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.

நிதி ஆயோக் வெளியிட்ட எஸ்.டி.ஜி குறியீட்டில், 78 புள்ளிகளோடு, தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது. இப்படி, எந்த புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு உச்சத்தில் இருக்கிறது. அதனால்தான், 65க்கு மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள் தமிழ்நாட்டை தேடி வருகிறது. இப்படி ஏராளமான புள்ளிவிவரங்களை என்னால் பட்டியலிட முடியும். இதையெல்லாம் சாதாரணமாக நாங்கள் சாதித்துவிடவில்லை. ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி, எதிர்காலத்திற்கான முதலீடுகளை செய்து, சாதனை செய்திருக்கிறோம்.

திராவிட மாடல் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்து, பல்வேறு மாநிலங்களில், அந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று, ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள். இப்போதுகூட, எங்களின் தோழி விடுதியை மாடலாக எடுத்துகொண்டு. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தரமான மருத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் உருவாக்கிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. அமைப்பே விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது. நாங்கள் செய்வது எல்லாமே முன்னோடித் திட்டங்களாக மாறியிருக்கிறது.

அதேசமயம், இவ்வளவு நன்மைகள் செய்யக்கூடிய திமுக அரசுக்கு ஒன்றிய பாஜ அரசு எப்படியெல்லாம் நெருக்கடிகளை கொடுக்கிறது என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிதி பகிர்வு, வரி பகிர்வு, சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிற்கு அநீதியையும் துரோகத்தையும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன், இப்போது வெளியிட்ட பட்ஜெட்டில்கூட அவர்கள் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்று நம்பிதான் கோரிக்கைகள் வைக்கிறோம். ஆனால், பட்ஜெட்டில் தந்தது ‘ஜீரோ’தான். இப்போது, என்டிஏ கூட்டணிக்கு அதே ஜீரோவை மக்களும் திருப்பித் தர போகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நிர்வாக ரீதியாக இந்த அளவுக்கு இடைஞ்சல்கள் கொடுப்பது, ஆளுநரை வைத்தும், அவதூறுகள் பரப்பியும், அரசியல் ரீதியாக சீண்டிப் பார்க்கிறார்கள். ஊழல் கறை படிந்த அத்தனைபேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிகொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள். இந்த ஊழல் கூட்டணிக்கு பெயர் டபுள் எஞ்சின். அந்த டப்பா எஞ்சினுடைய லட்சணத்தை டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் என்று பல மாநிலங்களில் பார்த்துகொண்டு தான் இருக்கிறோமே. பாஜவை பொறுத்தவரைக்கும், வெறுப்பை பரப்பி, பிரச்சினைகளை உருவாக்கி, அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். தமிழ்நாட்டை போலவே, அசாமிலும் இப்போது தேர்தல் வரப்போகிறது. அதற்கு, அசாம் பிஜேபியின் சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில், அந்த மாநிலத்தைச் சார்ந்த ஆளும் பாஜ முதல்வர் துப்பாக்கியில் குறி வைப்பது போல போட்டிருந்தார்கள். அதுவும் யாருக்கு எதிராக? இப்படிப்பட்ட காட்சியை வைப்பதற்கான துணிச்சல் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது. ஜனநாயக இந்தியாவில், இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா; இந்த நிலைமையைதான் இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு துணையாக இருப்பது இரண்டு விஷயம்.

ஒன்று, அடிமைககள் – மற்றொன்று, அவதூறுகள். இதையெல்லாம் பயன்படுத்தி ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களையும் ஒழித்திடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் நிச்சயம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய நிதியையும், நீதியையும் நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். பாஜவின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயமாக அது எடுபடாது. நிறைவேறாது. திராவிட மாடல் 2.O-வில் தமிழ்நாட்டை காத்து இந்தியாவின் நம்பர்-1 மாநிலமாக தொடர்ந்து வளர்த்தெடுப்பது நிச்சயம். தமிழ்நாடு வெல்லும். இந்தியாவிற்கே வழிகாட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று கூறியதாவது: எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணி தான் தேர்தலில் வெல்லும். கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பம் இல்லை. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது நடக்காது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரசுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். கலைஞர் ஒரு பழமொழி சொல்லி இருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* மக்களுக்கு என்றைக்கும் உண்மையாக இருக்கிறோம்
தமிழகத்தில், ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குகிறோம். 19 லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவும், அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று 12 லட்சம் பேருக்கு வழங்குகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக விடியல் பயணத்தை அறிமுகப்படுத்தினேன்.

அதில், இதுவரைக்கும், பெண்கள் 880 கோடி பயணங்களும், திருநர்கள் 48 லட்சம் பயணங்களையும், மாற்றுத்திறனாளிகள் 7 கோடி பயணங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.800 வரை மீதமாகிறது. இப்படி, ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவைகள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் சென்றடைந்துள்ளது. திமுக அரசு தொடர்ந்தால் தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு என்றைக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம், என்று முதல்வர் கூறினார்.

Tags : Congress ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Dimuka ,Chief Minister ,Mu. K. Stalin ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2...